கோவை விமான நிலையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சர்வதேச தரத்திலான கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது, இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறையை பின்பற்றும் வகையில் அந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் மது பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்படுகிறது. திருமண மண்டபம், திருமண நிகழ்ச்சி போன்ற மற்ற நிகழ்ச்சிகளில் ஒருபோதும் மது பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். 


சர்வதேச தரத்திலான உலக முதலீட்டாளர் மாநாடு, ஐபிஎல் போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு மட்டும் தான் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இல்லை. சர்வதேச தரப்பிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் இடத்தில் மது பயன்படுத்த அனுமதி வாங்கியுள்ளார்கள்.


தமிழ்நாட்டின் உச்சபட்ச மின் தேவை வரலாறு காணாத வகையில் 19 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்தது. இருந்தாலும் முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைந்த விலையில் குறுகிய கால ஒப்பந்த டெண்டர் முறையில் ஒரு யூனிட் மின்சாரம் 8. 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் இந்த 3 மாதங்களில் 1312 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில்  கூடுதல் மின்தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மின்வாரியம் தயராக இருக்கிறது. சமூக வலைதளங்களில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென சிலர் அவதூறு பரப்புகிறார்கள். மின் பழுது ஏற்பட்டால் மின் இணைப்பு எண்ணுடன் புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மின் தேவையை பொருத்தவரை எந்த பாதிப்பும் இல்லாமல், சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஊழல் பட்டியலுக்கும், சொத்து பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளது. சொத்துகள் குறித்த விபரங்கள் தேர்தல் வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சந்தேகம் இருந்தால் வேட்பு மனுவிற்கு ஆட்சேபணை தெரிவித்து இருக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருக்கலாம். குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் வெளியிட்டுள்ளார். ஊழல் பட்டியலுக்கும், சொத்து பட்டியலுக்கும் uள்ள வார்த்தை வித்தியாசத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தெரியவில்லை என்றால், தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள சொல்லுங்கள். முதலமைச்சர் உழைப்பால் உயர்ந்தவர். நாள் ஒன்றுக்கு20 மணி நேரம் உழைக்க கூடியவர். எங்களது கட்சி உறுப்பினர் எண்ணிக்கை ஒரு கோடியாக உள்ள நிலையில், 2 கோடி என்ற இலக்கை நோக்கி வேலை செய்து கொண்டிருக்கிறோம். பாஜக உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு? அதனைச் சொல்லி விட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லட்டும்.


12 மணி நேர வேலை தொடர்பாக இன்று மாலை அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதற்கு பிறகு முடிவு எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவிடும் முன்பு, அது சரியா, தவறா என்பதை ஆராய்ந்து பார்த்து வெளியிட வேண்டும். உண்மையாக குறை இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்க தயார். அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். நான் ரபேல் வாட்ச் பில் தான் கேட்டேன். துண்டு சீட்டா கேட்டேன்? ஒரு பொய்யை மறைக்க  ஒராயிரம் பொய் சொல்லி, நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி பலிக்காது. அவர்களின் எண்ணம் நிறைவேறாது. இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகள் எடுபடாது” எனத் தெரிவித்தார்.