தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓசூர், திருச்சி ஆகிய இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களூர், மைசூர் மற்றும் பெல்லாரியிலும் மற்றும் தெலுங்கானாவிலும்  ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் சேலம் - கொச்சின் புறவழிச்சாலையில் பட்டணம் பகுதியில் அந்நிறுவனம் வீட்டு மனைகள் விற்பனை செய்து வருகிறது. இதேபோல சிங்காநல்லூர், கண்ணம்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீட்டுமனைகள் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கார்பரேட் அலுவலகம் கோவை - அவிநாசி சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 3 வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல தொழிலதிபர் மகேந்திர ராமதாஸ் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் வீட்டுமனைகள் விற்பனை செய்து வரும் இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதா?, முறையாக வருமான வரி செலுத்தியுள்ளார்களா? உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் நடைபெறுகிறது. மேலும் வருமான வரித்துறையினர் சோதனை அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீடுகள், ஜி ஸ்கொயர் நிர்வாகி பாலாவின் ஈசிஆர் வீடு, முதலமைச்சர் மருமகன் சபரீசனின் உறவினர் பிரவீன் வீடு ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




அண்ணாமலை குற்றச்சாட்டு


கடந்தாண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், தமிழ்நாடு அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது, “மற்ற காண்ட்ராக்ட்டை விட ஜி ஸ்கொயருக்கு விதிகள் தளர்த்தப்பட்டு நிதி மிக விரைவாக வழங்கப்படுகிறது என்றும், இதில் முதலமைச்சரின் மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை மற்றும் கார்த்திக் தலைமை இயக்குநராக உள்ளனர்” எனவும் தெரிவித்தார். இதற்கு விளக்கமளித்த அமைச்சர் முத்துசாமி, “அண்ணாமலை குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 3 நாட்களிலோ, அல்லது 6 நாட்களிலோ அனுமதி வழங்கப்படவில்லை” என மறுப்பு  தெரிவித்திருந்தார். ஆனால் அண்ணாமலை  பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 


இந்நிலையில் அண்ணாமலை குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படைத்தன்மை குறித்து புரிதலை ஏற்படுத்த சட்ட ஆவணங்கள் மற்றும் வியாபார ஆவணங்களுடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “எங்கள் நிறுவனம் மீது அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு பொய்யானவை. ஜி ஸ்கொயர் குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு என நீங்கள் குறிப்பிட்ட தொகை தவறானது. தவறான முறையில் நாங்கள் சொத்து சேர்த்திருப்பதாக ஜோடிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தொழில் செய்து வருகிறோம். அதிகளவு நிலங்களை ஒரே சமயத்தில் கையகப்படுத்தி வருமானம் ஈட்டியதாக தவறான தகவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் கட்டுமானத் துறையில் சிறந்த நிறுவனமாக உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம்  திமுக  குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ, அவர்களது கட்டுப்பாட்டிலோ இல்லை. அண்ணாமலை செயலால் பல ஆண்டு உழைப்பால் கிடைத்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண