தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து, பாஜக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாஜக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும், முழக்கங்கள் எழுப்பட்டது. 


ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய வானதி சீனிவாசன், ”திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்த போது, விலைவாசி உயர்விற்கு போராடியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வுக்கு காரணமாக மாறிவிட்டனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொய்ப்பித்தலாட்டம் என்பது திமுகவினரின் டி.என்.ஏ.விலேயே உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எந்த சாலைகளிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கோவையில் சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் நிதி எங்கே? கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பராமரிப்பு பணிகள் கூட நடைபெறவில்லை.




தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. பாஜகவினர் வன்முறையை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்களை வன்முறைக்கு தள்ளும் சூழலை உருவாக்கியது திமுக அரசு. தமிழகத்தில் மின்சாரத்தைப் பொறுத்தவரை தற்பொழுது 100 யூனிட் இலவச திட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து ஏழை எளிய மக்களை ஏமாற்றுகிறது. மின்கட்டண உயர்வினால் சிறுகுறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிப்படையும். 


திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மேல் பழி போடுகிறது. தனித்தமிழ்நாடு வேண்டுமென்று சொல்வதற்கு திமுகவினருக்கு தைரியம் இருக்கிறதா? மத்திய அரசின் உதவி இல்லாமல் தாமாக மின்சாரத்தை தயாரித்து கொள்வார்களா?தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும், முதல் குரலை பாஜக தான் கொடுக்கிறது. கோவையில் பாஜக வலுவாக உள்ளது. மதுபான விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் காரணம் என சொல்வார்களா? பாஜக வினர் அந்த கடைகளுக்கு எல்லாம் போக மாட்டார்கள். 


தமிழகத்தில் எதன் விலை ஏறினாலும் மோடி தான் காரணம் பாஜக தான் காரணம் என திமுக பேசிய வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த சுமார் ஆறு மாத காலத்தில் நல்ல ஆபிசர்களை வேலைக்கு போட்டு நல்லாட்சி செய்வதாக காண்பித்தார்கள். ஆனால் தற்பொழுது கமிஷன் வாங்கி வருகின்றனர். மணல் எடுப்பதற்கு அரசு அலுவலர் கையொப்பம் இடுவதற்கு பதிலாக திமுகவினரே கையொப்பமிட்டு மணல் எடுத்து கொண்டு சென்று விடுகின்றனர். இதுவா நேர்மையான ஆட்சி?” எனத் தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “சமுதாயத்தில் அனைவரையும் பாதிக்கக்கூடிய அளவில் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். மத்திய அரசு கூறியதால் கட்டணத்தை உயர்த்தி உள்ளோம் என உண்மைக்கு புறம்பாக சொல்கிறார்கள். தமிழகத்தில் அனைத்தையும் நாங்களாகவே பார்த்துகொள்ள முடியும் அனைத்தையும் நாங்களாகவே நிர்வகித்து கொள்ள முடியும் என ஒரு புறம் கூறி விட்டு, மறுபுறம் மின்சாரம் மாதிரியான தேவையானவற்றை கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் திமுக அரசு நடந்து கொண்டிருக்கிறது.




அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அமைச்சரின் பெயரில் குடும்பத்தினர் ஒவ்வொரு ஹோட்டலிலும் தங்கி கமிஷன் வாங்கி கொண்டுள்ளனர். முதல்வருக்கு இதனை எல்லாம் கவனிக்க நேரம் உள்ளதா என தெரியவில்லை. இதனையெல்லாம் கவனித்திருந்தால் காவல்துறையை வைத்திருக்கக் கூடிய முதல்வர் கள்ளக்குறிச்சி சம்பவம் போன்றவற்றை தவிர்த்திருக்க முடியும். முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை மட்டுமல்லாமல் எந்த அமைச்சர்களும் இல்லை என்பது சிறிது சிறிதாக நிரூபணமாகிறது” என அவர் தெரிவித்தார்.


சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு,  “சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் நமது நாட்டில் உற்பத்தியாகவில்லை எனவும் அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருள் என்பதால் ஒவ்வொரு நாளும் விலைவாசி மாறிக்கொண்டிருக்கும். நமது கட்டுப்பாட்டில் உள்ளவற்றை நாம் சரியாக செய்கிறோமா என்பது தான் விஷயம். தேர்தல் வாக்குறுதிகள் பெட்ரோல் டீசல் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தும் ஏன் குறைக்கவில்லை?” எனப் பதிலளித்தார்.


உதய் மின் திட்டம் குறித்த கேள்விக்கு, ”தமிழகத்தை பொறுத்தவரை அதிகமாக தொழிற்சாலை இருக்கின்ற மாநிலம். அவ்வாறு இருக்கும் பொழுது அடுத்த பத்து வருடத்திற்கு தேவையான மூலதனத்தை ஏன் உருவாக்கவில்லை? திமுகவிடம் ஐடியா இல்லை. நிர்வாகத் திறமை இல்லை. மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்ப்போம் என மாநில அரசு கூறி வந்தால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ஸ்மார்ட் சிட்டி திட்டம்” எனப் பதிலளித்தார்.


தமிழ்நாட்டை விட கர்நாடகா குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்வாக இருப்பதற்கு பாஜக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பியதற்கு, ”அந்தந்த மாநிலங்களில் இருக்கக்கூடிய பாஜகவினர் அதன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். தமிழகத்தில் உள்ள பாஜகவினருக்கு தமிழக மக்களின் நலன் முக்கியம்” எனப் பதிலளித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண