கோவை கொடிசியா அரங்கில் 6 வது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா இன்று துவங்கியது. கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. இன்று நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சில புத்தகங்களையும் வாங்கினார். இளம் படைப்பாளர்களுக்கான விருதுகள் கவிஞர் நிழலி, சுரேஷ் பிரதீப், வடிவரசு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இன்று முதல் 31ம் தேதி வரை கொடிசியா அரங்கில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் 2 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 280 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150 பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்காட்சியில் 10 முதல் 15 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் தரப்படுகிறது. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல்வேறு வகையிலான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அதேபோல மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்களும் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரபலமான நூல்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் மக்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கோவை புத்தகத் திருவிழா 5 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தகத் திருவிழா கோவையில் நடைபெறுகிறது. இது வாசகர்கள் மற்றும் புத்தகப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் எனவும், 2 கோடி ரூபாய்க்கும் மேல் புத்தக விற்பனை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் புத்தக வெளியீடு உள்ளிட்ட பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக வரும் 28ம் தேதி 5,000 மாணவர்கள் ஒரே நேரத்தில் இணைந்து திருக்குறள் வாசிக்க உள்ளனர். 10 நாட்களும், பேச்சுப்போட்டி, சிலம்பாட்டம், எழுத்தாளர் வாசகர்கள் சந்திப்பு, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்கள் இலவசமாக அவினாசி சாலை வழியாக செல்லும் டவுன் பேருந்துகள் கொடிசியா வளாகம் வரை சென்று திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்