நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்தும், அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க கோரியும் பா.ஜ.க., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.


இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வீடியோ ஆதாரத்துடன் பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கடந்த 18 ம் தேதியன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆ.ராசா, பெரியார் ஆகியோரை இழிவுபடுத்தி பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டனர். இந்த புகாரின் பேரில் பாலாஜி உத்தம ராமசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 


இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், இந்துக்களை இழிவாக பேசியது, இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசா எம்.பி.யாக உள்ள, நீலகிரி மக்களவைத் தொகுதியில், 'இந்து முன்னணி' அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், தங்களது இந்து விரோத முகம் அம்பலப்பட்டு போனதை தாங்கிக் கொள்ள முடியாத விரக்தியில், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை தி.மு.க. அரசு கைது செய்ததுள்ளது.





மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய, ஆ.ராசாவை கைது செய்யாமல், பெயரளவுக்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், அதற்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத, பாசிச அரசு என்பதை இதன் மூலம் மீண்டும் ஒருமுறை தி.மு.க. நிரூபித்திருக்கிறது. தி.மு.க.வினர் வாயை திறந்தாலே, ஜனநாயகம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் பற்றி வகுப்பெடுப்பார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எதிர் கருத்து சொன்னாலே கைது செய்து, அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தி.மு.க.வின் இந்த அதிகார மிரட்டலுக்கு பா.ஜ.க. ஒருபோதும் அஞசாது. கைது செய்யப்பட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அவர் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பாசிச தி.மு.க. அரசை எதிர்த்து பா.ஜ.க. தொடர்ந்து போராடும்” எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண