கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளக்கிணர் பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளான ஆணின் கை கிடந்த நிலையில் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைகளை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். குப்பை வண்டி ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரனை நடத்தினர்.




இதனைத் தொடர்ந்து இரண்டு துண்டுகளாகக் கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்த போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என தெரிய வந்துள்ளது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது.




இதனிடையே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்ற 39 வயது இளைஞர் கடந்த 14 ம் தேதி முதல் காணவில்லை என கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரபு வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகை, துடியலூரில் எடுக்கப்பட்ட கைரேகையுடன் ஒத்துப்போனது. இதனால் கொலை செய்யப்பட்டவர் பிரபு என்பது உறுதியானது.


இந்நிலையில் இன்று துடியலூர் சந்தை பின்புறம் உள்ள கிணற்றில் உடல் பாகங்கள் தெரிவதாக அருகில் உள்ள பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற காவல் துறையினர்  தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடல் பாகங்களை மீட்டனர். மேலும் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 




இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பிரபு காந்திபுரம் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், அவர் குடியிருந்த பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய சரவணம்பட்டி பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் திருமணமான கவிதா என்ற பெண்ணுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததுள்ளது. கவிதாவின் புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு பிரபு மிரட்டியுள்ளார். இதனால் ஐடி பார்க் நிறுவனத்தில் எலக்டீரிசியனாக வேலை செய்து வரும் அமுல் திவாகர் (34) மறும் கார்த்திக் (28) ஆகியோர் உதவியுடன் பிரபுவை வீட்டிற்கு வரவழைத்து கவிதா கொலை செய்தது தெரியவந்தது. மேலும் பிரபுவின் உடலை 12 பாகங்களாக வெட்டி தனித்தனியாக பல்வேறு இடங்களில் வீசி சென்றதும் தெரியவந்தது. 




இதனைத் தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் பிரபுவின் வெட்டப்பட்ட 8 துண்டு உடல் பாகங்களை கைப்பற்றினர். மேலும் அமுல் திவாகர், கார்த்திக், கவிதா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் பாராட்டு தெரிவித்தார்.