பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அடிப்படை விளையாட்டுகளையும், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்குவிக்க 'கேலோ இந்தியா' (விளையாடு இந்தியா) விளையாட்டு போட்டிகளை கடந்த 2017-ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார். 2023-ம் ஆண்டுக்கான ஆறாவது கேலோ இந்தியா போட்டிகளை, ஜனவரி 19-ம் தேதி சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 31-ம் தேதி வரை நடக்கும் இப்போட்டிகளில், 5,600 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் இப்போ போட்டிகள் நடந்து வருகின்றன.


கேலோ இந்தியா போட்டிகள் நடப்பதையொட்டி, கோவை மாநகரின் பல இடங்களில், தமிழ்நாடு அரசு சார்பில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதாவது, 'தந்தை - மகன் - பேரன்' ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. 'கேலோ இந்தியா' என்பது தேசிய அளவிலான போட்டி. இது பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த கனவு திட்டம். கேலோ இந்தியா போட்டிகள் நடக்கவே மோடி தான் காரணம். போட்டிகளை தொடங்கி வைத்ததும் அவர்தான்.


ஆனால், தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் பிரதமரின் படம் இல்லை. ஆனால், மத்திய அரசின் சார்பில் கோவை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான விளம்பரத்தில் முதல்வர் ஸ்டாலினின் படம் இடம்பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக திமுகவுடன் வேறுபாடுகள் இருந்தாலும், மாநில அரசுக்கான, மாநில முதலமைச்சருக்கான மரியாதையை பாஜக அரசு எப்போதும் கொடுத்து வருகிறது. அதனால்தான், கோவை விமான நிலையத்தில் மத்திய அரசு வைத்துள்ள விளம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் இடம்பெற்றுள்ளது.


ஆனால், திமுகவை பொறுத்தவரை எது நடந்தாலும், அதற்கு யார் காரணமாக இருந்தாலும், 'தந்தை - மகன்-  பேரன்'  தான் காரணம் என்று விளம்பரம் செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.  கேலோ இந்தியா போட்டிக்கு காரணமான பிரதமர் மோடியை இருட்டடிப்பு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. குறுகிய நோக்கத்துடன் விளம்பரப் பதாகையில் மோடியின் படத்தை இடம்பர செய்யாமல் தடுக்கலாம். ஆனால், மக்களின் மனங்களில் இருந்து பிரதமர் மோடியை அகற்றிவிட முடியாது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. பிரதமர் மோடியின் படத்துடன் கேலோ இந்தியா போட்டிக்கான விளம்பரப் பதாகைகளை தமிழ்நாடு அரசு வைக்க வேண்டும். இதுபோன்ற சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.