தமிழ்நாட்டில் புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இது குறித்து முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை மாவட்டம் உருவான வரலாறு, பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் புதிதாக அமையவுள்ள பொள்ளாச்சி மாவட்டத்தின் சிறப்புகள் ஆகியவற்றை குறித்து பார்க்கலாம்.
கோவையில் இருந்து பிரிந்த மாவட்டங்கள்
திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பின்னர் 1799 ல் கோயம்புத்தூர் ஆங்கிலேயர் வசமானது. அப்போது பவானி, தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர்கள் தலைநகரமாக ஏற்றனர். பின்னர் ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதியன்று கோவை நகரை தலைநகரமாக கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது வடக்கு எல்லையாக மைசூரும், மற்றொரு புறம் சேலம் மாவட்டத்தின் காவிரி ஆறும், தென் கிழக்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும், மேற்கே கொச்சி, மலபார், நீலகிரி மாவட்டத்தையும் எல்லையாக கொண்டிருந்தது. 1868 ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் முதல் பிரிவினை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோவையில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது.
கடந்த நுற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டங்கள் இருந்தது. பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை ஆகியவை இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கொள்ளேகால் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மற்ற வருவாய் வட்டங்கள் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களாக பிரிந்து சென்றன. 1979 ம் ஆண்டு பெரியார் நூற்றாண்டை முன்னிட்டு பவானி, ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் தாலுகாக்களை உள்ளடக்கிய பெரியார் மாவட்டம் கோவையில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. பின்னர் ஈரோடு மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2009 ம் ஆண்டில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை, காங்கேயம், தாராபுரம் ஆகிய தாலுக்களை பிரித்து திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. மடத்துக்குளம் என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டு, திருப்பூருடன் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் பரப்பளவு குறைந்தது.
தற்போதைய கோவை மாவட்டம்
கோயம்புத்தூர் நகரம், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம். தமிழ் நாட்டிலேயே ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாக உள்ளது. இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் மற்றும் தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பொள்ளாச்சி என மூன்று வருவாய் மண்டலங்கள் உள்ளன. கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, அன்னூர், ஆனைமலை, கிணத்துககடவு, பேரூர், மதுக்௧ரை மற்றும் வால்பாறை ஆகிய 11 வருவாய் வட்டங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே, பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்தன. இருப்பினும் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் பொள்ளாச்சி மாவட்டம் பிரிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது, பொள்ளாச்சி மாவட்டமும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சியில் பிரிக்கப்படும் புதிய மாவட்டங்களில் பொள்ளாச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என பொள்ளாச்சி பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பொள்ளாச்சி மாவட்டம்
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை தாலுக்காகளை உள்ளடக்கி, பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. பொள்ளாச்சி பகுதி தென்னை விவசாயத்திற்கு புகழ் பெற்றதாக இருக்கிறது. அதேபோல வால்பாறை பகுதி தேயிலை விவசாயத்திற்கும், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகள் விவசாயத்திற்கும் பெயர் பெற்றவையாக உள்ளன. வால்பாறை பகுதி சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி மாவட்டத்திற்குள் செல்லும். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை உள்ளிட்ட விவசாய வருமானம் பொள்ளாச்சி பகுதிக்கு செல்லும். குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் ஆழியார் அணை, திருமூர்த்தி அணை, சோலையார் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் பொள்ளாச்சி மாவட்டத்திற்குள் செல்லும். இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் பரப்பளவு சுருங்குவதோடு, வருவாய் குறைய வாய்ப்புள்ளது.
பொள்ளாச்சி பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டால், விவசாய மாவட்டமாகவும், பசுமையும், வளமையும் நிறைந்த மாவட்டமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அரசு அதிகாரிகள் விளக்கம்:
தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக தகவல் வந்த நிலையில், தற்போது மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாக எந்தவொரு திட்டமும் இல்லை என்றும், இந்த தகவல் வதந்தி என்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.