கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, “பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் மாற்றங்கள் செய்வதில் தீவிரம் காட்டியுள்ளார். உலக நாடுகளை கொரோனா பாதிப்பு அச்சுறுத்திய சூழலில் இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடித்து இலவசமாக வழங்கி பாதுகாத்த தலைவராக பிரதமர் உள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகம் அதிக பலன் அடைந்து உள்ளது. முத்ரா கடன் தமிழகத்திற்கு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. செல்வமகள் திட்டம் அனைவருக்கும் கழிப்பறை, அனைவருக்கும் வீடு, ஆகியவற்றில் தமிழகம் பயனை அடைந்ததில் முன்னிலையில் உள்ளது. தொழில் துறையில் 3100 கோடிக்கு மேலாக முதலீடு வந்துள்ளது. மத்தியில் பதினோரு பெண் அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இராணுவத் துறையிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் சொந்தமாக தொழில் புரிய மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் திறன் மேம்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறையையும் ஊக்கப்படுத்தும் பிரதமராக மோடி உள்ளார். சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உலக அளவில் கூட்டமைப்பை உருவாக்கியவர் மோடி. தேவையில்லாத சட்டங்களை நீக்கி அவசியமான சட்டங்களை கொண்டு கொண்டு வந்தவர் பிரதமர். நதிகளை இணைக்க பிரதமர் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளார். அதற்காக தமிழகம் கூட இணைந்து முயற்சி செய்ய வேண்டும். வளர்ச்சி என்பது அனைவருக்குமானது என்பதில் பிரதமர் லட்சியமாக உள்ளார். கலவரங்கள் இல்லாமல் மக்கள் இணக்கத்துடன் வாழ வேண்டும், மத சுதந்திரத்தை காக்கின்ற அரசாக இந்த அரசாங்கம் உள்ளது.1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வை தமிழக அரசு குறைக்க அண்ணாமலை தலைமையில் பேரணி நடைபெறுகிறது. தி.மு.க எந்த வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். ஆளும் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு வாக்குறுதிகளை கொடுக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
பா.ஜ.க ஆதரவாளர் கார்திக் கோபினாத் கைது தொடர்பாக பேசிய வானதி சீனிவாசன், ”திரும்பத் திரும்ப பா.ஜ.க ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறீர்கள். கருத்துக்களை பொது வெளியில் சட்டத்திற்கு உட்பட்டு சொல்வதற்கும், அதேபோல விசாரணை முடிந்த நிலையிலும் நள்ளிரவில் தீவிரவாதியை போல கைது செய்வது மாநிலத்தின் கருத்து சுதந்திரமா? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி முயற்சிகள் மூலம் பா.ஜ.க வின் ஆதரவாளர்களை முடக்கி விடலாம் என்று நினைத்தாள் அந்த கனவு ஒரு போதும் பலிக்க போவதில்லை” என அவர் கூறினார்.
கர்நாடகாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா காவிக்கொடி ஒருநாள் தேசிய கொடியாக மாறும் என தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “தேசியக் கொடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த நாட்டில் மாறாது. அரசியலமைப்புச் சட்டத்தின் படி இருப்பது ஒரு போதும் பா.ஜ.க மாற்ற நினைக்காது” என பதிலளித்தார்.