கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனை முதன்மை உதவியாளரிடம் இருந்து 8.40 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில் நேற்று மாலை திடீர் சோதனை நடைபெற்றது. ஆவினில் பணியாற்றும் 20 பேருக்கு பணி நிரந்தரம் செய்யவும், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களுக்கு வழங்கப்படும் அரியர் பணம் வழங்கவும் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது ஆவின் வளாகம் நுழைவில் அடைக்கப்பட்டு வெளியாட்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் அனுமதியில்லை.
இந்த ஆய்வின் போது கோவை ஆவின் நிறுவனத்தின் முதன்மை உதவியாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர், சக ஊழியர்களுக்கு அரியர் பணம் வழங்க இலஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியிடம் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 8 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. கிருஷ்ணமூர்த்தியின் காரில் இருந்து 5 இலட்சத்து 90 ஆயிரம் பணமும், அவரது அறையில் இருந்த அலமாரியில் இருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் 8 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பேரூரை அடுத்த பச்சாபாளையம் பகுதியில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் எனப்படும் ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பால் ஊற்றும் உறுப்பினர்கள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 340-க்கும் மேற்பட்ட பிரதான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் இருந்து, தினமும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
தினமும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் பால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஆவின் தயாரிப்புகளான நெய், இனிப்புகள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னரே புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஆவின் நிறுவனத்தில் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.