கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி, பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் கோவை மாநகர பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.


இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சின்னக்கல்லார், சோலையார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சின்னக்கல்லார் பகுதியில் 14.2 செ.மீ மழையும், பால்பாறை பிஏபி பகுதியில் 12.2 செ.மீ. மழையும், வால்பாறை தாலுக்காவில் 12.1 செ.மீ மழையும், சோலையாறு பகுதியில் 8.6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.




இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 117.5 அடியை எட்டியது. அணைக்கு நீர் வரத்து 3894 கன அடியாக உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,750 கன அடி உபரி தண்ணீர் ஆழியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆழியார் ஆற்றங்கரை, ஆனைமலை, அம்பராம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.. இதேபோல 165 அடி கொண்ட சோலையாறு அணையில் 163.24 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. 4513.95 கன அடி நீர் வரத்து அணைக்கு உள்ள நிலையில், 3891.84 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக வால்பாறை பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் நாளையும் வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.