யோயோ ஆப் மூலம் போலி ப்ரொபைல் போட்டோ வைத்து பெண்களிடம் பழகி அந்தரங்க புகைப்படங்களை பெற்று மிரட்டி பணம் பறித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம், கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் "யோயோ என்ற ஆன்லைன் இணையதள ஆப் மூலம் தன்னுடன் பழகிய ஒரு நபர், தனது அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் எனக் கூறி பணம் பெற்றதாக" அப்பெண் தெரிவித்து இருந்தார். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். இந்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இந்த நிலையில் தொழில் நுட்ப உதவியுடன் கண்காணித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் என்ற என்ற நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  பரமசிவம் யோயோ என்ற ஆன்லைன் இணையதள ஆப் மூலம் அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து பெண்களிடம் நண்பராக பழகி உரையாடி வந்தது தெரியவந்தது. மேலும் பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்றுக் கொண்டு, அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தை பெறுவது வழக்கமாக வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதேபோல பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து இருப்பதும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலமும் பெண்களிடம் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பரமசிவம் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர்,  நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 


113 கிலோ குட்கா பறிமுதல்




கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சேலம் - கொச்சி புறவழிச்சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நான்கு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் ஈஸ்வரன் (33) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு கொண்டு சென்ற 113 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய கண்டெய்னர் லாரி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஈஸ்வரன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண