கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருதிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. மே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தை அடைந்து வந்த நிலையில், மே இறுதி வாரத்தில் இருந்து தொற்று பாதிப்புகள் குறையத் துவங்கியது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல தொற்று பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதல் பாதிப்பாக இருந்து வருகிறது.

 

கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் அதேவேளையில், பொதுமக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வந்தனர்.



 

கோவை மாவட்டத்திற்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் தமிழக அரசு 83 ஆயிரத்து 700 தடுப்பூசிகள் வழங்கியுள்ளது. இதில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 82 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 62 ஆயிரத்து 990 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20 ஆயிரத்து 800 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

 

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 189 தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 88 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட 36 பள்ளிகள் என 124 தடுப்பூசி மையங்களில் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட 48,000 தடுப்பூசிகள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிகளும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமான தடுப்பூசிகள் கையிருப்பு காலியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் கையிருப்பில் போதிய அளவு தடுப்பூசிகள் இல்லாததால் 7-ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.  இதனால் ராஜவீதி, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இன்று ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 



 

இந்த நிலையில் தடுப்பூசி வரத்து இல்லாததால், கோவை மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு காலியாகவே உள்ளது. இதனால் இன்றும் மூன்றாவது நாளாக கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீண்டும் தடுப்பூசிகள் வந்ததும், தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெறும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களிடம் தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் உள்ள நிலையிலும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.