கோவை கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு முறையாக உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில்லை என கொரோனா நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருதிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. மே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தை அடைந்து வந்த நிலையில், மே இறுதி வாரத்தில் இருந்து தொற்று பாதிப்புகள் குறையத் துவங்கியது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல தொற்று பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் மருத்துவமனைகள் மட்டுமின்றி, 33 தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் கொடிசியா அரங்கத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகளவிலான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மையத்தில் ஆலோபதி மற்றும் சித்தா ஆகிய முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 676 சாதாரண படுக்கைகளில், 588 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 88 படுக்கைகள் காலியாக உள்ளன. 353 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் 274 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 79 படுக்கைகள் காலியாக உள்ளன. இதேபோல சித்தா பிரிவில் உள்ள 100 படுக்கைகளில் 36 நிரம்பியுள்ள நிலையில், 64 படுக்கைகள் காலியாக உள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நோயாளிகளுக்கு முறையாக உணவு, தண்ணீர் வழங்கப்படுவதில்லை என கொரோனா நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்திற்கு அனைவருக்கும் உணவு வழங்கப்படுவதில்லை எனவும், இதனால் பலரும் பட்டினியாக கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனா நோயாளிகள் தெரிவித்தனர். இதுகுறித்துப் பேசிய ஒரு கொரோனா நோயாளி, “கொரோனா தொற்று குறைந்த பாதிப்பு இருந்ததால் கொடிசியா சிகிச்சை மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டேன். இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நான்கைந்து நாட்களாகியுள்ளனர். முறையாக நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில்லை. ஒரு அரங்கத்தில் 300 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனில், 200 பேருக்கு தான் உணவு வருகிறது. அதனைப் பெற கடும் போட்டி நிலவுகிறது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால் பலர் பட்டினி கிடக்கின்றனர். குடிநீர் வசதி கூட இல்லை. மாத்திரை சாப்பிடக்கூட தண்ணீர் இருப்பதில்லை.முறையாக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.