கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி முதியோர் காப்பகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த காப்பகம் ஆதரவற்ற முதியோர்களுக்கும், வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முதியவர்களுக்கும் அடைக்கலம் தந்து வருகிறது. இங்கு சுமார் 80 முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். குடும்பத்தினரால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் மூதாட்டிகள் இருந்தாலும், அவர்களின் உள்ளத்தில் அன்பு குறையவில்லை என்பதற்கு சான்றாக பள்ளி மாணவர்களுக்கு பசியாற்றும் அரும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த முதியோர் காப்பகம் அருகே மாநகராட்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பெரும்பாலான ஏழை, எளிய குடும்பப் பின்னணியை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். பெற்றோர்கள் வேலைகளுக்குச் செல்வதால் சரியாக காலை உணவு சாப்பிடாமல் வரும் மாணவர்கள், வெயில் காரணமாக பள்ளிகளில் மயங்கி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. இதனைப் பார்த்து வேதனையடைந்த மூதாட்டிகளின் ஈர நெஞ்சங்கள், மாணவர்களின் பசியை போக்க வேண்டுமென முடிவு செய்தது. அதன்படி கடந்த 2018 ம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று காலம் வரை சாப்பிடாமல் வரும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மூதாட்டிகளால் வழங்கப்பட்டது. 




கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாததால் காலை உணவு வழங்கும் பணிகள் தடைபட்டன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், மீண்டும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றன. இதன் காரணமாக தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் பள்ளியில் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் பசியால் சோர்வடைய வாய்ப்புள்ளதை என்பதை அறிந்து, மாணவர்களின் பசியை போக்க டீ, காபி, சுண்டல், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றை தயார் செய்து வழங்கி வருகின்றனர்.


மூதாட்டிகளுக்கு வரும் நிதியின் ஒரு பகுதி மாணவர்களின் பசியாற்ற செலவு செய்யப்பட்டு வருகிறது. 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூதாட்டிகளால் பசியின்றி படித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்ததும், மூதாட்டிகளால் தேநீர், ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பசியின்றி படிப்பில் கவனம் செலுத்த முடிவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல கோடை காலத்தில் சாலைகளில் செல்பவர்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தலும் மூதாட்டிகளால் நடத்தப்பட்டு வருகிறது.


இது குறித்து ஈர நெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் கூறுகையில், “இங்குள்ள மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய நேர உணவிற்காக பள்ளிக்கு வரும் நிலை உள்ளது. அவர்களின் பசியாற்ற கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு காலை உணவு பாட்டிகளால் வழங்கப்பட்டு வந்தது. இப்போதும் பசியோடு இருக்கும் மாணவர்கள் காப்பகத்திற்கு வந்து சாப்பிட்டுச் செல்வது வழக்கம்.




பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மாலை நேர சிறப்பு வகுப்புகளின் போது பசியால் சோர்வடைய வாய்ப்புள்ளது. அதனால பசியின்றி படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக டீ, ஸ்நாக்ஸ் பாட்டிகளால் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் சோர்வின்றி படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்டாலும் தாங்களும் ஒரு பெற்றோர் தான் என்பதை பாட்டிகள் நிரூபித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.


குடும்பத்தினரால் கைவிடப்பட்டாலும் இந்த சமூகத்தை குடும்பமாக பார்த்து மாணவர்களின் பசியாற்றும் மூதாட்டிகளின் ஈர நெஞ்சங்கள் போற்றுதலுக்கு உரியவை!