திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தம் ; 350 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு..!

இப்போராட்டத்தால் மொத்தம் 350 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்கும் எனவும், மத்திய அரசு உடனடியாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Continues below advertisement

திருப்பூர் பின்னலாடை துறையினர் நூல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் இரண்டு நாட்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

இந்தியாவின் டாலர் நகரம், பின்னலாடை நகரம் எனப் பல பெருமைகளை திருப்பூர் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் ஜவுளித் துறையில் திருப்பூருக்கு முக்கிய இடம் உண்டு. இங்கு தயாராகும் ஆடைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பின்னலாடை தொழிலில் நிட்டிங், ரைசிங், காம்பாக்டிங், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங் என 55 தொழில் அமைப்புகள் இயங்கி வருகிறது. 


இந்நிலையில் பருத்தி பஞ்சுக்கு ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாட்டால் நூல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டாக நூல் விலை நிலையில்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால் தொடர்பில்லாத நிறுவனங்களில் இலட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு விலை அபரிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பின்னலாடை துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். 


356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை ஒரு இலட்சம் ரூபாயை கடந்துள்ளது. வரலாறு காணாத பஞ்சு விலையால் நூற்பாலைகளும் அனைத்து ரக நூல் விலையை கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. நூல் விலை கடந்த மாதம் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இம்மாதம் மீண்டும் 40 ரூபாய் நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால் திருப்பூரில் இயங்கி வரும் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மேலும் பனியன் உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 


இந்நிலையில் பஞ்சு நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், பருத்தியை யூக வணிகத்திலிருந்து நீக்கி அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பின்னலாடை துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் பின்னலாடை துறையினர் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட 36 சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு நாட்கள் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை முடங்கும் எனவும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாகவும் பின்னலாடை துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தால் மொத்தம் 350 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்கும் எனவும், மத்திய அரசு உடனடியாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Continues below advertisement