கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்கு பாளையம புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவரது மகன் சசிகுமார் (35). இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் பைனான்ஸ் தொழிலும் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சசிக்குமாரின் வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் அவரை வெளியே வரச் சொல்லி அழைத்துள்ளனர். அப்போது வெளியே வந்த சசிக்குமாரை, இருவரும் சராமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சசிக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் வெளியே வந்து பார்த்த போது அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 


இது குறித்து தகவலறிந்து வந்த செல்வபுரம் காவல் துறையினர் சசிகுமார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், கொலை தொடர்பாக செல்வபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சசிகுமார் பைனான்ஸ் தொழில் செய்ய இளங்கோவிடம் 5 லட்சம் ரூபாய் பணம் வட்டிக்கு பெற்றதாகவும், ராம்ஜி பணம் வாங்கி கொடுத்த நிலையில் சசிகுமார் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்ததால் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சசிக்குமாரை இருவரும் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மதுவுக்கு அடிமையான மகனை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை போலீசில் சரண்


கோவை துடியலூர் அடுத்த தொப்பம்பட்டி பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக் (50). இவரது மனைவி உமேரா.  இவர்களது மகன் 22 வயதான ஷாஜகான். உமேரா தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணிக்கு சென்று வருகிறார். ஷாஜகான் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். ஷாஜகானுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது  வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த முகமது ரபிக் தனது மகன் ஷாஜகானிடம், ஏன் இப்படி அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்கிறாய், என்று கேட்டதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.




இதனால் ஆத்திரமடைந்த முகமது ரபிக், வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து தனது மகன் ஷாஜகானின் வயிற்றுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் கீழே விழுந்த ஷாஜகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து முகமது ரபிக் மற்றும் அவரது மனைவி உமேரா ஆகியோர் நேரடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்து சரணடைந்தனர். இதையடுத்து துடியலூர் காவல் துறையினர் ஷாஜகானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகமது ரபிக் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.