கோவை அவிநாசி சாலையில் காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில், காவலர் குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இந்த காவலர் குடியிருப்புகளில் தொடர்ச்சியாக பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்படும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து திருடனை காவல் துறையினர் தேடி வந்தனர். இதனிடையே சம்பவ இடங்களில் பதிவு செய்யப்பட்ட கைரேகை அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், செந்தில் குமார் என்பவர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த செந்தில் குமாரை கோவை காட்டூர் சரக காவல் துறையினர், கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் உடன் இணைந்து கடந்த 25 ம் தேதியன்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி குடியிருப்புகளில் தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.


இதனைத் தொடர்ந்து செந்தில் குமார் காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்தவர் எனவும், கடந்த 1993 ம் ஆண்டில் காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்து சென்னை சிறப்பு காவல் படையில் பணி புரிந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் காவல் துறையில் பணியாற்றிய சித்ரா என்ற பெண் காவலரை திருமணம் செய்து கொண்டதாகவும், சித்ரா தற்போது சிங்காரபேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி ஆயுதப்படை வாகனப் பிரிவில் பணிபுரிந்த போது தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் உடன் ஏற்பட்ட மன வருத்தத்தினால், கடந்த 2009 ம் ஆண்டில் டாடா சூமோ வாகனத்தை எடுத்துச் சென்று காட்டில் தள்ளிவிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.




கடந்த 2009 ம் ஆண்டு முதல் பணி நீக்கத்தில் இருந்து வருவதாகவும், கடந்த 2013 ம் ஆண்டில் கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் நிறுத்தப்பட்டு இருந்த டெம்போ டிராவலர் வானகத்தை திருடிச் சென்று ஏரியில் தள்ளி விட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து லாரி டிரைவராக வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது ஒரு உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து காரணமாக அந்த வேலையும் பறிபோனதாக தெரிவித்துள்ளார். இதனால் வேலையும், பணமும் இல்லாததால் பொது மக்களின் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி கிடைக்கும் பணத்தில் சூதாடி குடித்து ஜாலியாக இருக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.


பொது இடங்களில் சென்று திருடினால் மாட்டிக் கொள்வோம் என்பதால் காவலர் குடியிருப்புகளுக்கு சென்று பூட்டி இருக்கும் வீட்டைப் பார்த்து திருடியதாகவும், யாராவது கேட்டால் நான் போலீஸ் என்றும் தெரிந்தவரை பார்க்க வந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவை காவலர் பயிற்சிப் பள்ளி குடியிருப்பில் திருடப்பட்ட நகைகளை காவல் துறையினர் மீட்டனர்.