கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் வாகனங்கள் சேதப்படுத்துதல் சம்பவங்கள் நடைபெற்றது. சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவியது. தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த வழக்குகளில் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு, பல்வேறு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளான கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சதாம் உசைன் (31) மற்றும் துடியலூர் பகுதியை சேர்ந்த அகமது சிகாபுதூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மேலும் இரண்டு பேர் மீது கோவை மாநகர காவல் துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 23ம் தேதியன்று குனியமுத்தூர் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகி தியாகு என்பவரின் காரை, தீ வைத்து எரிக்க முயன்ற ஜேசுராஜ் மற்றும் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய பி.எப்.ஐ. நிர்வாகி பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது. இதுவரை 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பி.எப்.ஐ. அலுவலகங்களுக்கு சீல்
அண்மையில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட 5 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்திற்கு வட்டாச்சியர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்