தமிழ்நாடு முழுவதும் திருவாரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


பத்திரப் பதிவு துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, தொழில்துரை, வட்டார போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, வணிக வரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத் துறை, வேளாண்மைத் துறை, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை, மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆகிய 16 துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.


தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பணம் வசூல் செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு கோடியே 12 இலட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.


இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் க.க. சாவடி பகுதியில் உள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 32 ஆயிரத்து 680 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாலர் ஈஸ்வரி மற்றும் உதவியார் யுவராஜ் ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதேபோல கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு உறுப்பினர் தனலட்சுமி மற்றும் ஊழியர் கார்த்திக் ஆகியோர் காப்பகத்தில் உள்ள ஒரு குழந்தையை வீட்டுக்கு அனுப்ப சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.


இந்த புகாரின் பேரில் அந்த அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சான்றிதழ் வழங்க இலஞ்சம் வாங்கிய இருவரையும் கையும், களவுமாக பிடித்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்களில் நடந்த இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.


இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குழி தாலுக்கா அலுவலகத்திலும் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண