கோவை அருகே பெரியார் சிலை மீது சாணி ஊற்றி அவமதிக்கப்பட்ட வழக்கில் இந்து முன்னணியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வடசித்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பெரியார் நினைவு சமத்துவபுரம். இப்பகுதியில் ஒரு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை பாதுகாப்பு காரணங்களுக்காக கூண்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் இந்த பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கடந்த 18 ம் தேதியன்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் பெரியார் சிலை மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி அவமரியாதை செய்தனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெகமம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி மக்கள் உதவியுடன் காவல் துறையினர் மாட்டு சாணத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்தனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சனாதனம் குறித்த சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலையை அவமதித்தார்களா? அல்லது வேறு யாரேனும் வேறு காரணங்களுக்கான அவமதித்தார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணைனர். பெரியார் சிலை பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து நெகமம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சம்பவத்தன்று பெரியார் சிலை அருகே உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமாக இருந்த வடசித்தூர் பகுதியை கிருஷ்ணமூர்த்தி என்ற ராஜா மற்றும் கோகுல் உள்ளிட்ட இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் பெரியார் சிலை மீது சாணி கரைச்சலை வீசி அவமதிப்பு செய்ததை இருவரும் ஒத்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் இந்து முன்னணி சேர்ந்த இயக்கத்தில் இருப்பதும், பெரியாரை அவமதிப்பு செய்யும் என்ற நோக்கில் சாணி கரைசலை வீசி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் பொள்ளாச்சி இரண்டாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரகாசம் முன்பு அஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.