கோவையில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை குணப்படுத்துவதற்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்பதால் குழந்தையின் பெற்றோர் அரசிடம் உதவியை நாடி உள்ளனர்.


கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் ரமணகுமார், ஜனனி தம்பதியினர். ரமணக்குமார் தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சிகிச்சை அளிப்பதற்கு ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான தொகை அவர்களிடம் இல்லாத நிலையில், அந்த ஊசியை செலுத்தி குழந்தையை காக்க அரசிடம் உதவி வேண்டி அக்குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.




இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தங்கள் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய நிலையில் இதனை குணப்படுத்துவதற்கு பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டதாகவும், அனைத்து மருத்துவர்களும் Zolgen SMA என்ற ஊசியை செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அந்த ஊசியின் மதிப்பு ரூ.16 கோடி என்பதால், 16 கோடியை தங்களால் திரட்ட முடியாத நிலை உள்ளதால், தங்கள் நண்பர்கள் உதவியுடன் IMPACT GURU என்ற செயலி மூலம் பணத்தை திரட்ட முயற்சி செய்து வருவதாகவும் 7845723752 என்ற UPI(PhonePe) மூலமும் பணத்தை பெற்று வருவதாக தெரிவித்தனர். எனினும் சிலர் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதை நம்ப மறுப்பதாகவும் எனவே என்ன செய்வதென்று தெரியாமல் தற்பொழுது மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவித்து அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினர். தமிழக முதல்வரும் குழந்தையின் பிரச்சனையைக் கவனத்தில் கொண்டு தங்களுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


தற்போது குழந்தைக்கு தொடையிலிருந்து முட்டி வரை தசைநார் சிதைவு பாதித்துள்ள நிலையில் விரைவில் இதனை குணப்படுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் ஒவ்வொரு பாகங்களில் தசைகள் பாதிக்கப்பட்டு நுரையீரலும் பாதிப்படையும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்தனர். எனவே இச்செய்தியை பார்க்கும் பொதுமக்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் தங்களால் முயன்ற நிதி உதவியை அளித்து உதவிடுமாறு கேட்டுக்கொண்டார். பணத்தை PhonePe எண்: 7845723752 என்ற எண்ணுக்கு அனுப்பியும் அல்லது IMPACT GURU என்ற செயலி மூலமாக உதவிடுமாறு கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர். இதற்கு முன்பும் இதே போன்று கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டு இது குறித்தான செய்திகள் வெளிவந்து தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அக்குழந்தைக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.