பகுத்தறிவு பகலவன் எனப் போற்றப்படும் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இதன்படி இன்று சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பெரியார் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பறை இசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததை வரவேற்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் முகமூடி அணிந்தபடி வந்து சமூக நீதி கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதேபோல பெரியார் பிறந்த நாளை பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு முன்பு பல்வேறு அமைப்பினர் கொண்டாடினர்.
இந்நிலையில் காந்திபுரம் அருகே உள்ள 100 அடி சாலை மற்றும் டாடாபாத் பகுதியில் பெரியாரைப் பற்றி அவதூறாக பாரத் சேனா என்ற அமைப்பின் சார்பில் நேற்றிரவு சுவரொட்டிகள் ஓட்டப்பட்டன. இது குறித்த தகவலின் பேரில் காட்டூர் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, அச்சுவரொட்டிகளை ஒருவர் ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அந்த நபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சுவரொட்டியை ஒட்டியவர் ரவிக்குமார் என்பதும், கோவை மாவட்ட பாரத் சேனா இளைஞர் அணி பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் (31) என்பவரும், பாரத் சேனா பீளமேடு பகுதி உறுப்பினர் தமிழரசன் (30) என்பவரும் சுவரொட்டிகளை ஒட்டச் சொல்லியதும் தெரியவந்தது. இதையடுத்து சுவரொட்டிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் ரவிக்குமாரை காட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழரசனை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் ரவிக்குமார் கூலித் தொழிலாளி என்பதும், பாரத் சேனா அமைப்பை சேர்ந்த முத்துகிருஷ்ணன், தமிழரசன் இருவரும் சுவரொட்டிகளை ஒட்டச் சொல்லியதும் தெரியவந்தது. இதன் பின்னர் ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். பெரியார் குறித்த அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியதற்காக முத்துகிருஷ்ணன், தமிழரசன் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.