கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 12000 ஆயிரம் பெண்களுக்கு ’இதம்’ என்ற திட்டத்தின் மூலம் மாதம்தோறும் இலவச நாப்கின் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”பிரதமர் மோடி பிறந்த நாளை இன்று முதல் அக்டோபர் 7 ம் தேதி வரை சேவை மற்றும் சமர்ப்பண தினமாக கொண்டாடி வருகின்றோம். பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி மாதம் தோறும் 10 ஆயிரம் பெண்களுக்கு வீடு தேடி சென்று நாப்கின் வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி இருக்கின்றோம். மீதமுள்ள 2000 நாப்கின்கள் தனது அலுவலகத்தில் இருக்கும். பெண்கள் தங்களது வயதுக்கான ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை காட்டி, முகவரியை கொடுத்து விட்டு அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெண்கள் நாப்கின் வாங்கி செல்லாம்.
தமிழக அரசு இன்று சமூக நீதி நாள் என்று அறிவித்து செயல்படுத்தி இருப்பதை வரவேற்கின்றோம். மோடி பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருக்கின்ற நிலையில், பெரியார் உயிரோடு இருந்தால் இதை கொண்டாடி இருப்பார். பிற்படுத்தபட்டோர், பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து இருப்பதுடன், மாநிலங்களே பிற்படுத்த பட்டோர் பட்டியலை தயாரிக்கலாம் என்ற அனுமதி வழங்கியவர் மோடி. மோடியின் பிறந்த தினம் நாட்டிற்கே சமூக நீதி தினம்.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ச்சியாக சோதனை நடக்கின்றது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இல்லத்தில் ஆதாரம், நீதிமன்ற உத்திரவுகளின் படி சோதனை நடத்தியிருந்தால் அது வேறு. ஆனால் பழி வாங்கும் நடவடிக்கையாக சோதனைகள் இருக்க கூடாது என்பது தான் தங்கள் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். பா.ம.க அவர்கள் கட்சி நலனுக்காக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி இருக்கின்றார்களா? இந்த தேர்தலுக்கு மட்டும் கூட்டணியில் இருந்து விலகி இருக்கின்றார்களா ? என்ற எந்த விளக்கமும் இல்லை. எனவே பா.ம.க தலைமை இதை தெளிவுபடுத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க துவங்கி விட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கின்றது. நீட் தற்கொலைகளுக்கு திமுக தான் காரணம். நீட்டை அரசியலாக்கி திமுக தற்கொலைகளை தூண்டி வருகின்றது. நீட்டை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகி விட்டநிலையில், மாணவர்களை குழப்பும் வேலையை திமுக கைவிட வேண்டும். தேர்வு பயத்தால் உயிரிழக்கும் அனைத்து மாணவர்களுக்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்பது தான் சரியானது. நீட்டில் இறந்தவர்களுக்கு மட்டும் இழப்பீடு கொடுப்பது என்பது சரியானது அல்ல. உள்ளாட்சி தேர்தலில் யாரெல்லாம் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கூட்டணி முடிவான பின்பு தான் உறுதி செய்யப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் இல்லை” என அவர் தெரிவித்தார்.