அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமமுக கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருப்பதாக தெரிவித்தார்.
அ.தி.மு.க. இணைய வாய்ப்பு இல்லை:
அவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு அமமுக அழிந்து விடும் என்ற சொல்லி இருப்பது குறித்த கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், வினாசகாலே விபரீதபுத்தி என்பார்கள். அழிய போகின்றவர்கள் அடுத்தவர்களை பார்த்து அப்படி பேசுவார்கள் எனவும், துரியோதன கூட்டம் எப்போதும் ஜெயித்தது கிடையாது, அவர்கள் வீழ்வது உறுதி என தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரிந்த அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைக்கப்படுவார்கள் என சசிகலா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அதிமுக மீண்டும் ஓன்றிணைய வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார். அதிமுக ஒன்றிணையும் என சசிகலா சொல்லி இருப்பதால் அவரிடம் தான் இதை கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், எந்தக் காரணத்தை கொண்டும் பழனிசாமி்யுடன் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ். மாநாட்டில் பங்கேற்பா?
ஐனவரி மாதம் ஓ.பி்.எஸ் அணி சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால், அந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து யோசிப்போம் என தெரிவித்தார். அமமுக ஒபிஎஸ் இடையேயான நட்பு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்றாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். அதிமுக - பா.ஜ.க கூட்டணி பிரிவு குறித்த கேள்விக்கு, இரு கட்சிகள் ஒன்றாக இருந்தனர். இப்போது பிரிந்து இருக்கின்றனர். அப்படித்தான் பார்க்க முடியும் என தெரிவித்தார். பா.ஜ.கவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது, நிலைப்பாட்டை உரிய நேரத்தில் தெரிவிப்போம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.