கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


பால் வளம்:


இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ”தமிழ்நாட்டில் பால் வளத்தை பெருக்குவதற்கும் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. கால்நடைகளுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது, கடன் வசதிகள் செய்வது, மானியங்களை பெற்று தருவது போன்றவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறுகிய காலத் திட்டமாக இரண்டரை லட்சம் கரவை மாடுகளுக்கு கடன் வழங்குவதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.


விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பாலின் தரத்திற்கு ஏற்ற விலை என்பதையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். கடந்த காலங்களில் பாலுக்கு ஒரு குறைந்தபட்ச விலை தான் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மாற்றி தரத்திற்கு ஏற்ப விலை என்ற நிலையை கொண்டு வந்துள்ளோம். அதேபோல் 10 நாட்களுக்கு ஒரு முறை பாலுக்கான பணம் பட்டுவாடா செய்து வருகிறோம்.


பற்றாக்குறையா?


ஆவினில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களுடைய திறன் மேம்பாட்டு பயிற்சியை கோவை மாவட்டத்திற்கு தொடங்கி வைத்துள்ளோம். ஆவின் சப்ளையில் பற்றாக்குறை ஏற்படுவதாக கூறப்படுவது ஒரு அப்பட்டமான பொய்யான தகவல். பாலின் சப்ளையை குறைக்கவில்லை. பால் தட்டுப்பாடு இன்றி எவ்வளவு கேட்டாலும் வழங்கி வருகிறோம். ஆவின் வியாபாரம் பெருகியுள்ளது. ஏதோ ஒரு குறிப்பிட்ட தரத்தில் உள்ளது கிடைக்கவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு முழுவதுமாக பால் சப்ளை இல்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். 




விலையை கூட்டி விற்றால் நடவடிக்கை:


பால் லீக்கேஜ் கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனை பூஜ்ஜிய அளவிற்கு கொண்டு வருவோம். ஆவின் பாலகங்களில் வெளிபொருட்கள் விற்பனை செய்தால் தங்களுக்கு தெரிவிக்கலாம். அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். எம்ஆர்பி விலைக்கு தான் ஆவின் பால்கள் விற்கப்படவேண்டும். சில இடங்களில் ரீடெய்லர்கள் தவறு செய்வதாக புகார்கள் வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கான கடமை தங்களுக்கும் உள்ளது.  ஆவினின் விலையை கூட்டி விற்பனை செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் பொருள்களை வாங்குபவர்களும் எம்ஆர்பியை விட கூடுதலாக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால் அவர்களே கேள்வி எழுப்பலாம்.


இத்துறையில்  இருந்த பல்வேறு நடைமுறை சிக்கல்களை சரி செய்துள்ளோம். கொரோனா வந்த காலத்தில் இரண்டு ஆண்டுகளில் கால்நடைகளை பராமரிப்பதில் பல்வேறு இடர்பாடுகள் வந்தது. இதனால் பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை ஒரே நாளில் சரி செய்ய முடியாது. இனி வரும் காலங்களில் இந்த நிலைமை மாறும். முன்பெல்லாம் பால் மட்டுமே தேவைப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பால் உற்பத்தி பொருட்களும் அதிகளவு விற்பனை நடைபெறுவதால், அதற்கு தகுந்த பால் தேவையும் உள்ளது தற்பொழுது எங்களுடைய விற்பனை எட்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது.


போனஸ்:


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டை விட தற்பொழுது 20 சதவிகிதம் கூடுதல் ஆர்டர்கள் வந்துள்ளது. இன்னும் அது கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆவின் ஊழியர்களுக்கு போனஸ் தொகை ஒரே விதமாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மீது சில புகார்கள் வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய ஊழியர்கள் தயாராக இருந்தால், ரேஷன் கடைகளுக்கும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய தரலாம். கிராமப்புறங்களில் ஆவின் விற்பனையை அதிகரிப்பதற்கு தொழில் முனைவோர்கள் அதற்கான முன்னுரிமைகள் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.