கோவை மாவட்டம் இக்கரை பூலுவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களில் சோலார் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கு கடந்த 2020ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஏற்கனவே வசித்து வந்த வீடுகளை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக வீடுகள் கட்டும் பணிகள் துவங்கியது. 88 வீடுகளுக்கு முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை சார்பில் வீடுகள் கட்டும் பணிகள் துவங்கிய நிலையில், இரண்டு வருடங்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கின்றன.
நரசிபுரம் அருகே உள்ள பட்டியார் கோவில்பதியில் உள்ள இருளர் சமுதாயத்தை சார்ந்த 25 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பயனாளிகள் சாலை ஓரத்தில் உள்ள குடிசையில் வசித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பழங்குடியின மக்கள் கூறுகையில், ”தாங்கள் ஏற்கனவே வசித்து வந்த வீடுகள் சிதிலமடைந்த நிலையில், அதனை மாற்றி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் பணிகள் துவங்கிய நிலையிலேயே இன்றும் உள்ளதால், சாலை ஓரத்தில் குடிசை போட்டு வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், பாதுகாப்பு பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருகிறோம்.
தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசிப்பது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வீடுகள் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில வீடுகள் 90 சதவீத பணிகள் முடிந்தாலும் முழுமையடையாத காரணத்தினால் பயனாளிகளுக்கு வழங்கப்படாததால் உள்ளது. இதனால் கட்டப்பட்ட வீடுகளும் பராமரிப்பின்றி உள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கடந்த ஆட்சிக் காலத்தில் சோலார் உடன் கூடிய பசுமை வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டும் பணிகள் துவங்கியது. ஆனால் நிதி இல்லை என கட்டுமான பணியை நிறுத்தியதால், இந்த சூழல் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகத்துடன் பேசி விரைவில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்