திமுகவை எதிர்க்க சிறப்பாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என திருப்பூர் அதிமுக மாநகர மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் அதிமுக மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 35 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கட்சியின் நலன் கருதி, இன்னும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்பதற்காக ஒற்றை தலைமை என்ற முடிவை திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் எடுத்துள்ளது. 35 பொதுக் குழு உறுப்பினர்களும் நூறு சதவீதம் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் எழுதிய கடிதம் குறித்த கேள்விக்கு, ”பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்ற அறிவிப்பில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். அதனால் பொதுக்குழு நிச்சயம் நடைபெறும். எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவார்”என அவர் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவை பொறுத்தவரை அனைத்து முக்கிய தீர்மானங்களும் எடுப்பது பொதுக்குழு தான். ஈ.பி.எஸ் ஆனாலும், ஓ.பி.எஸ் ஆனாலும் பொதுக் குழு உறுப்பினர்களும் தொண்டர்களும் தான் தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும். ஆர்ப்பாட்டங்களை அறிவிப்பது, சில முடிவுகளை எடுக்கும் நேரங்களில் ஒற்றை தலைமை இருந்தால் தான் சரியாக இருக்கும். திமுகவை எதிர்க்க 4.5 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக வர வேண்டும். எங்களை பொறுத்தவரை யாரையும் ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. ஓ.பி.எஸ் எங்களுக்கு அண்ணன் தான். ஆனால் தலைவர் என்ற நிலை வருகையில் சிறப்பாக செயல்பட எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் வெவ்வெறு விதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், திருப்பூர் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்