கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்றுப் பரவல், கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கும் பரவத் துவங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது ஆனைக்கட்டி. 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆனைகட்டி சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதேசமயம் இப்பகுதியில் போதிய வசதிகள் இல்லாததால் பழங்குடியின மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் பெரிய ஜம்புக்கண்டி பகுதியில் ஆனைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்நிலையத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாததாலும், தினமும் 4 மணி நேரம் மட்டுமே செயல்படுவதாலும் பழங்குடியின மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜோஸ்வா கூறுகையில், "ஆனைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினால் 13 ஆயிரம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதில் 11 ஆயிரம் பேர் மலைவாழ் மக்கள். கொரோனா தொற்று இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இதுவரை 25 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்று பாதிப்பை பொறுத்து குறைந்தளவு பாதிப்புள்ளவர்களுக்கு மாத்திரைகளை கொடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். அதிக பாதிப்புள்ளவர்களுக்கு கோவிட் கேர் சென்டர்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைக்கின்றனர். இந்த நிலையம் காலை 10 மணி முதல் 2 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே இயங்கி வருகிறது. நிரந்தர மருத்துவர்கள் இல்லை. கோவை அரசு மருத்துவமனைக்கு 36 கிலோ மீட்டர் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் பயனடையும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்" என அவர் கூறினார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தென்னிந்திய பழங்குடிகள் மக்கள் சங்க தலைவர் முருகவேல் கூறுகையில், "இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 படுக்கை வசதிகள் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர மருத்துவர்கள் இல்லை. ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. தினமும் 4 மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது. இங்கு இருந்த அனைத்து வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்சை பொள்ளாச்சிக்கு மாற்றி விட்டு, சிறிய ஆம்புலன்சை தந்துள்ளனர். இதனால் அவசரத் தேவைகளுக்கு சிரமப்பட வேண்டியுள்ளது. 24 மணி நேரமும் சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் 25 கி.மீ செல்ல வேண்டியுள்ளது. இதற்கு போதிய பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் கிடையாது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என அவர் தெரிவித்தார்.
இதேபோல ஆனைக்கட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதில்லை. கேரளாவில் இருந்து வர இ பாஸ் கட்டாயம் என்றாலும், சோதனை செய்யாததால் இரு மாநில மக்களும் வந்து செல்கின்றனர். இதனால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.