நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் புலி தாக்கி பெண்மணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 


மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டம் உயிர்க்கோள காப்பகங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல இம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் புலிகள், காட்டு யானைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களுக்குள் செல்வது வழக்கம். அதேபோல கிராம மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வனப்பகுதிக்குள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வனப்பகுதியை ஒட்டிய யானைப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி. 50 வயதான இவர், நேற்று மாலை முதல் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தாரும் அருகில் இருந்த கிராமத்தினரும் தேடி உள்ளனர். இரவு வரை மாரி வீடு திரும்பாத நிலையில் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.


இந்நிலையில் இன்று காலை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் மாரியை தேடிச் சென்ற போது, புதரில் உடல் சிதைந்த நிலையில் ஒரு உடல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் சென்று பார்த்த போது, அது மாரி என்பதும், புலி தாக்கி உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் மாரியின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு சென்றனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தெப்பக்காடு பகுதியில் வேட்டை தடுப்பு காவலர் மாதன் என்பவரை புலி தாக்கியதில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது புலி தாக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பழங்குடியின கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இரண்டு பேரை தாக்கிய புலியை உடனே கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண