தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கள் அறிவித்திருந்தன. இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப்படவில்லை. அதேசமயம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் செயல்படும் தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.


இதில் 2 கோரிக்கைகளை மட்டுமே தற்போதைக்கு பரீசிலிக்க முடியும். மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என தொழிற்சங்கங்க நிர்வாகிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இன்னும் கால அவகாசம் வழங்க முடியாது என அந்த வேண்டுகோளை தொழிற்சங்கங்கள் நிராகரிக்க பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.


6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையிலும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளது. அந்த தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிமணிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உக்கடம், சாய்பாபாகாலணி உள்ளிட்ட பணிமணிகளில் இருந்து பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. உக்கடம் கிளையில் 70 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று 67 பேருந்துகள் இயங்கி வருகின்றன. மற்ற பணிமணைகளிலும் ஒரு சில பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.




இதே போல இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து கோவை புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. காலை 4 மணி முதல் நகர பேருந்துகள் இயக்கப்படுவதாலும் போதிய ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் பாதிப்பு அடையா வண்ணம் கருமத்தம்பட்டி கிளையில் உள்ள 43 பேருந்துகளும் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர் நடத்துனர்களும் இயக்கி வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக முதல்வரும் போக்குவரத்து துறை அமைச்சரும் தீர்த்து வைப்பார்கள் என தெரிவித்தார் இந்த நிலையில் அதிகாலை முதல்  போக்குவரத்து பணிமனைகள் முன்பாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அது போல் தீயணைப்பு துறையினரும் பணிமனையில் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல சூலூர் பணிமனையில் இருந்தும், அன்னூர் பணி மனையில் இருந்தும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தினால் மக்கள் சிரமமின்றி பயணிக்க கோவை மண்டல போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தொமுச தொழிற்சங்கம் மற்றும் இதர வேலை நிறுத்தத்தில்  பங்கு பெறாத தொழிற்சங்கத்தை சார்ந்த ஓட்டுநர், நடத்துனர் வைத்து முழுமையாக பேருந்து இயக்கப்படும். வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து  பயிற்சி பெற்ற வெளி ஓட்டுனர்களின் பட்டியல் பெறப்பெற்று அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுனர்களை  வைத்து இயக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மாவட்ட காவல் துறையை அணுகி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம் சார்பாக பொது மக்களுக்கு இடையூறு இன்றி அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என கோவை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.