கோவை மாநகரில் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, மருதமலை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக, கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் வாகனங்கள் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு நேர விரயம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க கோவை மாநகர போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.




சாலைகளில் உள்ள சிக்னல்களை காவலர்கள் அமர்ந்து இயக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காவலர்கள் சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இதனால் அதிக வாகனங்கள் தேங்கி நிற்கும் சாலையில் கூடுதலாக தேவையான நேர அவகாசம் கொடுத்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்னல்களை எளிதாக கடந்து செல்லும் வகையில், அவ்வாகனங்கள் வரும் போது சிக்னல்களை திறந்து விட உதவிகரமாக இருந்து வருகிறது.



அதேசமயம் போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாத சமயத்தில் டைமர் முறையில் சிக்னல்கள் இயக்கி வருகின்றன. போக்குவரத்து காவலர்கள் சிக்னல்களை நிழற்குடையில் அமர்ந்து இயக்குவதால், சிலர் சிக்னலை மதிக்காமல் செல்வதும் அதிக வேகமாக வாகனத்தை இயக்குவது போன்ற விதி மீறல்கள் நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து காவலர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து இறங்கி வந்து விதிமுறைகளை தடுக்க முடியாததால் வாகன ஓட்டிகள் தப்பி விடுகின்றனர். இதையடுத்து சோதனை முயற்சியாக சிக்னல்களை போக்குவரத்து காவலர்கள் சாலையில் நடந்து கொண்டே ரிமோட் மூலம் இயக்கும் வகையிலான திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் செந்தில்குமார் கூறுகையில், முதற்கட்டமாக சோதனை முறையில் டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ரிமோட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். போக்குவரத்து காவலர் ரிமோட் மூலம் சிக்னல்களை இயக்குவார் எனவும், நிழற்குடையில்  அமராமல் சாலையில் நடந்தபடி போக்குவரத்தை நெரிசலை கட்டுபடுத்துவதுடன் விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். சாலை விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க முடியும் எனவும், இந்த சென்சார் மூலம் சிக்னல் இருந்து 100 மீட்டர் தூரம் வரை இயக்க முடியும் எனவும் அவர் கூறினார். அடுத்த கட்ட சோதனை முயற்சியாக லாலி ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.