கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த இருவரை சாலையில் ஆயுதங்களுடன் விரட்டி சென்று கத்தியால் குத்திய 10 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை அம்மன் குளம் பகுதியில் கடந்த 2020 ஆம்  ஆண்டு ஜனவரி மாதத்தில் கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக, வினோத் குமார் என்பவர் கத்தியால் குத்தி  கொலைச் செய்யப்பட்டார். இந்த  கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த  விஜயகுமார், கண்ணன், ஹரிகரன், சக்திவேல் ஆகியோரை ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம்வழக்கு விசாரணைக்கு ஹரிகரன், விஜயகுமார் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபோது, கொலை செய்யப்பட்ட வினோத்குமாரின் தந்தை கருப்பசாமி, அண்ணன் பிரவீன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து மறித்துள்ளனர்.




விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரும் தப்பியோட, சாலையில் விரட்டி சென்ற அக்கும்பல் கத்தியால் குத்தியுள்ளது. இதில் ஹரிகரன், விஜயகுமார் ஆகியோருக்கு உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை முயற்சி தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.




காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வினோத்குமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்கு விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பசாமி  மற்றும் பிரவீன், சங்கர், அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர்,ராஜ்குமார், கப்பீஸ்குமார் ஆகிய 10 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 10 பேர் மீதும் கொலை முயற்சி, கொலை மிரட்டல் , முறையற்ற தடுப்பு, தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த 12 மணிநேரத்திற்குள் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இருவரை கும்பல் ஆயுதங்களுடன் விரட்டி சென்று தாக்குவதும், பின்னர் இளைஞர்கள் திரும்பும் காட்சிகள் வெளியாகியுள்ளன.