கோவையில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால் அடுத்தடுத்து பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


கோவை - தடாகம் சாலையில் உள்ள கே.என்.ஜி புதூர் பகுதி முதல் கோவில்மேடு வரை குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் தடாகம் சாலையில் சாலையின் நடுவே குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குழிகளை குடிநீர் வடிகால் வாரியத்தினர் முறையாக மூடாமல் அரைகுறையாக மூடி செல்வதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதேபோல் அரசு பேருந்து ஒன்றும் கனரக லாரி ஒன்று சிக்கி மீட்கப்பட்டது. 


இந்நிலையில் இன்று சிவாஜி காலனி இடையர்பாளையம் இடையே உள்ள பகுதியில் சாலையில் தோண்டப்பட்டு இருந்த குழி சரிவர மூடப்படாததால் அவ்வழியே இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக லாரியை மீட்க முடியாததால் அவ்வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே லாரி சிக்கி இருந்த இடத்தின் பக்கவாட்டு பகுதியில் செல்ல முயன்ற பழைய இரும்பு ஏற்றி வந்த ஆட்டோ ஒன்றும் பாரம் தாங்காமல் பள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக தடாகம் சாலையில் கோவில் மேடு இடையர்பாளையம் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல் துறையினரோ குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களோ வராததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே போக்குவரத்தை சீர் செய்யும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இந்த சாலையில் அடிக்கடி வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்க ஆளாகி வருகின்றனர். குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Also Read | Gutka Ban: குட்கா தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! விரைவில் புதிய சட்டமா?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண