திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவாரூர் இன்று வந்திருந்தார். பின்னர், திருவாரூரில் அரசு மருத்துவமனை கல்லூரியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


பான்பராக், குட்கா:


அப்போது, அவர் கூறியதாவது, “ பான்பராக், குட்கா இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆட்சியில் பான்பராக், குட்கா கடைகளில் தாராளமாக விற்கப்படுவதை 21 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் தெளிவாக காட்டினர். ஆனால், விற்பனையை தடை செய்யாமல் 21 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யவே முயற்சித்தனர்.


விரைவில் மேல்முறையீடு:


ஆனால், போதைப் பொருட்களுக்கு எதிராக தற்போது நடவடிக்கை மேற்கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் அவற்றிற்கு தடை இல்லை என்பதால் அங்கிருந்து வரும் வாகனங்களில் காய்கறிகள், பூக்கள் கொண்டு வரும் வாகனங்களில் கடத்தி வரப்படுகிறது. இந்த சூழலில் பான்மசாலா, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து ஆணையிட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும்.


இளைஞர்களை போதைக்குள்ளாக்கும் இப்பொருட்கள் நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும். மூக்கு வழியாக செல்லும் கொரோனா தடுப்பு மருந்தை இன்றுதான் அறிமுகம் செய்துள்ளனர். கடந்த முறை டெல்லி சென்றபோது மத்திய அமைச்சரை சந்தித்து மூக்கு வழியாக செல்லும் மருந்தை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


நர்சிங் கல்லூரி:


பிரதமரிடம் தெரிவிப்பது நல்ல முடிவை அறிவிப்பதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே இப்போது வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மதுரை எய்ம்ஸ் கட்டிடத்துக்கு 242 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இங்கு சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.


ஆனால், அதே காலகட்டத்தில் இந்தியா முழுவதும் தொடங்கப்பட் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான கட்டிட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஆனாலும், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். மாவட்டத்திற்கு நர்சிங் கல்லூரி திறக்க கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தால் முதல் நர்சிங் கல்லூரி திருவாரூரில் தொடங்கப்படும்.”


இவ்வாறு அவர் கூறினார்.