மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி உள்ளிட்டவை விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்தாண்டு கோடை விழா மே 6 ம் தேதி துவங்க உள்ளது. புகழ் பெற்ற ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ம் தேதி முதல் 23 வரை நடைபெறுகிறது. இதனிடையே கோடை விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.


நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோடை கால விடுமுறை வருவதால், வரும் நாட்களில் ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக வரக்கூடும். எனவே வாகன போக்குவரத்து அதிகரிப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மாவட்ட காவல்துறையின் சார்பில் மேட்டுப்பாளையம் நகரில் நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.


சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதிக்கபட மாட்டாது. பாரத் பவன் ரோடு - ரயில்வே ஸ்டேஷன் ரோடு - சிவம் தியேட்டர் - சக்கரவர்த்தி ஜங்ஷன் வழியாக நீலகிரிக்கு செல்ல வேண்டும். நீலகிரியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் வாகனங்கள், ராமசாமி நகர் - பாலப்பட்டி - வேடர் காலனி - சிறுமுகை ரோடு - ஆலங்கொம்பு ஜங்ஷன்- தென்திருப்பதி 4 ரோடு - அன்னூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் பெரிய பள்ளிவாசல் - சந்தக்கடை - மோத்தைபாளையம் - சிறுமுகை ரோடு - ஆலங்கொம்பு - தென்திருப்பதி 4 ரோடு சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும். மேட்டுப்பாளையம் முதல் சிறுமுகை இடையே ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்படும். சத்தியமங்கலம் – பண்ணாரி - ஈரோட்டிலிருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புவோர் ஆலங்கொம்பு - தென் திருப்பதி 4 ரோடு - அன்னூர் சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்தை சீரமைக்க தேவையான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண