தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணி பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ராஜவீதி தேர்நிலைத் திடல் வரை நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வெள்ளைசட்டை, காக்கிபேண்ட் அணிந்தபடி ஊர்வலமாக நடந்து சென்றனர். இதையடுத்து ராஜவீதி தேர்நிலைத் திடல் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பேரணியை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லத்தி, கம்பு, இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதை மீறி, கைகளில் தடிகளுடன் சாகா பயிற்சி மேற்கொண்டதாலும், பொதுக்கூட்டத்தில் சிலம்பு குச்சிகளுடன் சிலர் கலந்து கொண்டதாலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். கோவை மாவட்ட தலைவர் சுகுமார், செயலாளர் முருகன், இணைச்செயலாளர் குமார் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் மீது 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


முன்னதாக சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுப்பாடுகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை தடுப்பது நியாயமல்ல என ஆர்எஸ்எஸ் தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. அதைதொடர்ந்து, தமிழகத்தின் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணியுடன், பொதுகூட்டமும் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ள நிலையில், தமிழக காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.


அதன்படி நிகழ்ச்சியின் போது யாரும் பாடல்கள் மற்றும் சாதி, மதம் ரீதியாக எந்த கருத்துகளையோ பேசக்கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது. பேரணியில் கலந்து கொள்வோர் லத்தி, கம்பு, இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. பேரணி அனுமதிக்கப்பட்ட இடங்களில் சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே பேரணிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பேரணி நடத்த வேண்டும். பேரணியில் போது எந்தவொரு பொது அல்லது தனியார் சொத்துக்கள் சேதமடைந்தாலும் அதற்கான இழப்பீடு கொடுக்கப்படும் என உறுதிமொழி அளிக்கவேண்டும். மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண