கோவை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் நாளை காலை கோவைக்கு வருகை தர உள்ளார். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அப்போது பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்க உள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடவசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு காவல் துறையினரால் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வருகையை ஒட்டி திமுகவினர் ப்ளக்ஸ் போர்டு, கட் அவுட்கள் வைக்கக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தி உள்ளார்.
போக்குவரத்து மாற்றம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சி பகுதியில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவை மாவட்ட காவல் துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காந்தி சிலையிலிருந்து பாலக்காடு ரோட்டில் முத்தூரில் வலதுபுறம் திரும்பி டி. நல்லிகவுன்டன்பாளையம் வழியாக சி.கோபாலபுரம் சென்று வடக்கிபாளையம் சாலையை அடைந்து வடக்கிபாளையம் சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை செல்ல வேண்டும். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் கோவில்பாளையத்தில் இடதுபுறம் திரும்பி நெகமம் ரோட்டில் கக்கடவு வழியாக நெகமம் நால் ரோடு வந்து பல்லடம் பொள்ளாச்சி ரோட்டில் கரப்பாடி பிரிவு வழியாக அனுப்பர்பாளையம் திப்பம்பட்டி வழியாக செல்ல வேண்டும். மேலும், ஆனைமலை பாலக்காடு திருச்சூர் செல்லும் வாகனங்கள் நெகமம் ரோட்டில் நேராக புளியம்பட்டி தேர்நிலை வந்து பாலக்காடு சாலையில் செல்ல வேண்டும்.
கேரளாவிலிருந்து வாளையார் வழியாக கோவை வரும் கனரக வாகனங்கள் பாலத்துறை சந்திப்பு வழியாக அனுப்பப்படும். அவிநாசியிலிருந்து கோவை வரும் கனரக வாகனங்கள் கருமத்தம்பட்டி சந்திப்பு வழியே அனுப்பப்படும். திருச்சி சாலை வழியே கோவை வரும் வாகனங்கள் காரணம்பேட்டை சந்திப்பு வழியே அனுப்பப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இலகுரக வாகனங்கள்
கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் குள்ளக்காபாளையம் பிவிஎன் பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தொப்பம்பட்டி வந்து நெகமம் ரோட்டில் பொள்ளாச்சி அடைய வேண்டும். பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் வடக்கிபாளையம் பிரிவில் இடதுபுறம் திரும்பி வடக்கிபாளையம் ரோட்டில் வடக்கிபாளையம் சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை ரோட்டை அடைந்து கோவை செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆச்சிபட்டி பகுதியில் பேருந்துகள் செல்லும் பாதைகளும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.