கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலக்குடி சாலையில் காட்டு யானை நடமாட்டத்தால் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதி காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. இயற்கை ஏழில் கொஞ்சும் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வளைந்து நெளிந்து செல்லும் 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட வால்பாறை சாலை டூவிலர் ரைடர்களின் விருப்பத்திற்கு உரிய சாலையாக இருந்து வருகிறது. அதேபோல வால்பாறையில் இருந்து சோலையார் அணை வழியாக கேரளா மாநிலத்திற்கு செல்லும் சாலக்குடி சாலையும் ரைடர்களுக்கு பிடித்த சாலையாக உள்ளது.


கேரள மாநிலம் மளுக்கபாறாவில் இருந்து அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு 50 கிலோ மீட்டர் தூர வால்பாறை - சாலக்குடி சாலை வனப்பகுதி வழியாக செல்கிறது. அடர் வனத்தின் ஊடாக வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் எந்நேரமும் வனவிலங்குகள் குறுக்கிடலாம். இதனால் வன விலங்குகளை பார்க்கவும் ஏராளமானோர் இச்சாலை வழியாக பயணித்து வருகின்றனர். 




இந்நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை - சாலக்குடி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. சாலையில் நின்றுள்ள அந்த யானை அவ்வழியாக செல்லும் வாகனங்களை தூரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். சமீபத்தில் சாலைக்குடியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த கேரள அரசு பேருந்தை அந்த யானை துரத்தியது. இதனால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 


தொடர்ந்து அந்த காட்டு யானை சாலையில் உலா வருவதால் வாகன ஒட்டிகள் நலன் கருதி ஒரு வார காலத்திற்கு வாகன போக்குவரத்திற்கு கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அவ்வழியாக செல்லும் வாகனங்கள் வனத்துறை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவ்வழியாக அரசு பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். காட்டு யானை நடமாட்டம் குறைந்த பின்னர் அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதேபோல வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சிறுகுன்றா, தாய்முடி, சேக்கல் முடி, நடுமலை உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தாழம்பூ மகளிர் சுய உதவி குழு கடையை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தின. இதனால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண