கோவையில் ஒயிலாட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பம்பை இசைத்து, உற்சாகத்துடன் ஒயிலாட்டம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் குட்டை பகுதியில் சங்கமம் ஒயிலாட்ட கலைக் குழுவின் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், 75-வது சுதந்திர ஆண்டு அமுதா பெரு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டுப்புற பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒயிலாட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்கள் நடனமாடினர். துணிகளை கைகளில் வைத்தப்படி, இசைக்கேற்ப அடவுகளை மாற்றி ஆடினர். இந்த நடனத்தை ரசித்த மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து அங்கு பம்பை அடித்துக் கொண்டிருந்தவரிடம் பம்பையை வாங்கி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் நடனக் கலைஞர்களுடன் இணைந்து சிறிது நேரம் ஒயிலாட்ட நடனம் ஆடினார். இசைக்கு ஏற்ப ஆட்சியர் நடனம் ஆடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் சங்கமம் கலைக் குழுவினர் ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அழகு, ஒய்யாரம் என பொருட்படும் ஒயில் என்பது, ஆட்டத்துடன் இணைந்து ஒயிலாட்டமாக பெயர்படும் இக்கலை, ஒரே நிற துணிகளை கைகளில் வைத்து கொண்டு இசைக்கேற்ப வீசி ஆடும் குழு ஆட்டம். நெல் குத்துதல், நாற்று நடுதல் உள்ளிட்ட உடல் உழைப்பு சார்ந்த ஆடல்களை கொண்ட ஒயிலாட்டம், இசையும், நடனமும் இணைந்து இருப்பதால் உடலும், உள்ளமும் வலுப்பெறும் என அக்கலைக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
சங்கமம் கலைக்குழு என்ற பெயரில் பள்ளி தலைமை ஆசிரியரான கனகராஜ் என்பவர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைத்து ஒயிலாட்டத்தை மீட்டெடுத்து வருகிறார். பொழுதுபோக்காக மட்டுமின்றி, கல்வியின் முக்கியத்துவம், மது பாதிப்பு உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும் இதனை நடத்தி வருகின்றனர். நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் இவர்களின் முயற்சிக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்