வடகிழக்கு பருவமழை வலுபெற்று வந்த நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்தது.


மண் சரிவு:


குறிப்பாக வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக நீலகிரி எல்லை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்ததது. இதனால் அடிக்கடி மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலைகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படுவதும், இதனால் நீலகிரி மலை ரயில் சேவை நிறுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வந்தது.


இதனிடையே கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சுற்றுலா பயணிகளிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




போக்குவரத்து பாதிப்பு:


இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் உள்ள பர்லியாறு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் மற்றும் பாறைகள் சாலைகளில் சரிந்து விழுந்து இருப்பதன் காரணமாக, அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


குன்னூர் மற்றும் உதகை செல்லும் வாகனங்களும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்களும் கோத்தகிரி சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


பயணிகள் அவதி:


இதனிடையே குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு இருப்பதை அறியாத மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அச்சாலை வழியாக உதகை செல்ல காரில் வந்தார். அப்போது மண் சரிவு ஏற்பட்டு இருப்பதைப் பார்த்த அவர், சாலையிலேயே காத்திருந்தார். கோத்தகிரி சாலை வழியாக சுற்றி செல்ல வெகு நேரம் ஆகும் என்பதால், குன்னூர் சாலை வழியாகவே செல்ல வேண்டி அமைச்சர் எல்.முருகன், மண் சரிவுகள் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கும் பணிகள் முடிவதற்காக காத்திருக்கிறார். இந்த மண் சரிவு காரணமாக உதகை செல்லும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரி வழியாக சென்று வருகின்றனர்.