நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவை நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ராமநாதபுரம், சிங்காநல்லூர், உக்கடம், புலியகுளம், மசக்காளிபாளையம், பீளமேடு உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலகாக பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதே போல கோவை புறநகர் பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்தது.




இந்த கனமழை காரணமாக கோவை - அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் லங்கா கார்னர் மேம்பாலம், கிக்கானி ரவுண்டானா மேம்பாலம் ஆகியவற்றின் அடியிலும் வெள்ள நீர் தேங்கியது. இதனால் அப்பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேம்பாலங்களின் அடியில் தேங்கி இருந்த மழை நீர் ராட்சத மோட்டார் கொண்டு வெளியேற்றப்பட்டது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


வீடுகளுக்கு புகுந்த மழைநீர்


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நள்ளிரவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். முழங்கால் அளவு தண்ணீர் இருந்த நிலையில் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்களே தண்ணீரை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும், தேர்தல் நேரத்தில் வரும் பிரதிநிதிகள் அதற்கு பின்பு தங்களை கண்டு கொள்வதே இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




காலனியின் அருகில் இருக்கும் ஓடையை தூர் வாரினாலே தண்ணீர் வீடுகளுக்குள் புகாது எனவும், ஆனால் ஓடையை தூர் வாராமல் விட்டதால் தண்ணீர் கழிவு நீருடன் சேர்ந்த வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாகவும் ஓவ்வொரு முறை மழை பெய்யும் பொழுதும் இதே நிலை தான் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு மழை பெய்ததால் தண்ணீரில் குழந்தைகளுடன் பெரும் சிரமத்திற்கு உள்ளானதாகவும், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவிலுக்கு செல்ல தடை




பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பாலாற்றுக்கு வரக்கூடிய சிற்றோடைகள் வழியாகவும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பாலாற்று கரை ஆஞ்சநேயர் கோவில் ஆற்றின் மையப் பகுதியில் இருப்பதால், கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப் பாலத்தின் மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம் ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் மேலும் நீர்வரத்து குறைந்தவுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.