கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, “தமிழகத்தில் நிலவும் சில தவறான மற்றும் எதிர்மறையான அணுகுமுறைகளை ஒழிக்க வேண்டும். சமுதாயத்தில் அனைத்து மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய கல்வி உள்ளிட்ட அம்சங்களை தங்களுடைய சொந்த காரணங்களுக்காக மறுக்கும் அரசியல், வருத்தத்தை அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் எனப் பேசினார். ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த கருத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.


இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசிக் கொண்டு இருந்த போது, 'தமிழ்நாடு எங்கள் நாடு' என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரையில் திராவிட மாடல், அண்ணா, பெரியார், அம்பேத்கார் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்தும், சில விஷயங்களை சேர்த்தும் வாசித்தார். மரபு மீறி ஆளுநர் செயல்பட்டதாக கூறி பல்வேறு கட்சியினர் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், ஆளுநரின் உருவப்படம் மற்றும் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


இதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஆறுசாமி, ”பல்வேறு போராட்டங்களுக்கு பின், தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது. தற்போது ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்லுவதற்கு கூட தயங்குகின்றார். ஆந்திர பிரதேசம் மத்திய பிரதேசம் போன்றவற்றில் இருக்கக்கூடிய பிரதேசம் என்கின்ற சொல்லும் நாட்டை குறிப்பது தான். அப்படி இருக்க தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என ஆளுநர் கூறுவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. சமூக நீதி, பெண் உரிமை, பெரியார் அம்பேத்கர், அண்ணா ஆகிய வார்த்தைகளை கூற மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே அவர் எழுந்து சென்றது ஜனநாயக மரபு கிடையாது” எனத் தெரிவித்தார்.




தபெதிகவினர் ஆளுநர் ஆர்.என்.ரவி உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்படுவது குறித்து தகவலறிந்த பாஜகவினர், சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பாக திரண்டனர். பின்னர் தபெதிகவினரை கண்டித்து போராட்டம் நடத்த காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டங்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.