கோவை உக்கடம் கரும்புக்கடை பகுதி சேர்ந்தவர் ஹாபியா. இவரது வீட்டிற்கு கடந்த மின் கணக்கீடு செய்வதற்காக மின்சார துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வந்துள்ளனர். இதையடுத்து மின்வாரிய அலுவலகத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி அலுவலகத்திற்கு சென்ற போது, அவரது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,  இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் 40 ஆயிரம் ரூபாய் சலுகை தருகிறோம் எனவும், முப்பதாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் எனவும், மாதம் 6 ஆயிரம் ரூபாய் கட்டுங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் வீட்டிற்கு எப்படி மின் கட்டணமாக 70 ஆயிரம்  ரூபாய் வரும்? தன்னால் இந்த தொகையை செலுத்த இயலாது எனவும் உடனடியாக இது குறித்து என்ன நடந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஹாபியா மின்வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்த புகார் குறித்து மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஹாபியா புகார் மனு அளித்தார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், ”எங்களுக்கு 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணமாக வரும். கடந்த மாதம் 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணமாக வந்தது. 200 யூனிட் தான் ஓடி உள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்து இருந்தோம். ஆனால் அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்கவில்லை. சரியாக மின் கட்டணம் செலுத்தி வந்தோம். பழைய பாக்கி எதுவும் இல்லை. இந்த பணத்தை எங்களால் கட்ட முடியாது. மீட்டர் பாக்ஸ் மாற்றி ஆறு மாதம் ஆகிறது. எங்கள் வீட்டில்  டிவி, ஃபேன், ஃப்ரிட்ஜ் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்துகின்றோம். எங்கள் வீட்டில் வேறு எந்த மின் பொருளும் இல்லை. 


அதிகாரிகள் தற்பொழுது 40 ஆயிரம் ரூபாயை நாங்கள் சலுகையாக தருகிறோம் என தெரிவித்துள்ளனர். இவ்வளவு பணத்தை நாங்கள் எப்படி கட்டுவது? இதற்கு யார் பொறுப்பு? எனவே மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கு தவறாக நடந்தது என்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்து கொள்ள வேண்டும். இதுபோல சாமானிய மக்களின் தலையில் திணிக்க கூடாது” எனத் தெரிவித்தார்.


இதேபோல கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செல்வபுரம் காலனி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். பள்ளிகள், தேவாலயங்கள், நியாயவிலைக்கடை உள்ள பகுதியில் மதுபானக்கடை அமைக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், இதனைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சோமனூரை  செல்வபுரம் காலனி பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடை மக்கள் போராட்டம் காரணமாக அகற்றப்பட்ட நிலையில், மீண்டும்  டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும், இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண