பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி புகைபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் போராட்டம் நடத்திய தபெதிக அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டீசல் விலையும் 100 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில், கோவையில் பெட்ரோல் பங்குகளில் உலகிலேயே மிக அதிகமாக உயர்த்தி சாதனை புரிந்துள்ள நரேந்திர மோடி புகைபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நூதனப் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.
இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக குப்புசாமி நாயுடு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் படம் அகற்றப்பட்டது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைபடத்துடன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர். இதனை தொடர்ந்து பெட்ரோல் பங்க் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் மோடியின் புகைபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் தபெதிக அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பெட்ரோல், டீசல் அதிக விலை நூறு ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மக்கள் படும் வேதனையை உணர்த்தும் விதமாக இப்போராட்டம் நடத்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலைகளை உலகிலேயே மிக அதிகமாக உயர்த்தி சாதனை புரிந்துள்ள நரேந்திர மோடி புகைபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தோம்.
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களுக்கு ஏற்படும் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 30க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.