Finance Minister Nirmala Sitharaman: ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கோரிக்கை வைத்த நிலையில், அவர் வற்புறுத்தலின் பேரில் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனை நேரில் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா ஓட்டல் எதிரே நாளை மாலை 3 மணிக்கு போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் , சிறு-குறு நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன.?
கோவை, கொடிசியா வளாகத்தில் சிறு, குறு தொழில் முனைவோர், பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து துறைகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், “ஒவ்வொரு பொருட்களுக்கும் விதவிதமாக ஜிஎஸ்டி போட்டு தருவது பிரச்சனையாக உள்ளது. பன்னிற்கு ஜிஎஸ்டி கிடையாது. அதில் கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பன், க்ரீம் தந்தால் நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். அனைத்திற்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டியை வைத்து விடுங்கள். வானதி சீனிவாசன் வடநாட்டில் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுகிறார்கள் என்பதால் ஸ்வீட்டிற்கு 5 சதவீதமும், காரத்திற்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள் என்கிறார். தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காபி அதிகமாக போகும். இவற்றுக்கு ஒரே மாதிரி ஜிஎஸ்டி போடுங்கள். ஜிஎஸ்டி போடுவதில் கணினியே திணறுகிறது” எனத் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பொதுவாகத்தான் கேள்வியை முன்வைத்தேன்' என்று அன்னபூர்ணா சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கு , ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் வற்புறுத்தலின் பேரில் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அன்னப்பூர்ணா ஓட்டல் எதிரே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.