கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர். இதனைதொடர்ந்து கொடிசியா வளாகத்தில் சிறு, குறு தொழில் முனைவோர், பஞ்சாலை  உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துரையாடினார். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து துறைகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்றனர். கொடிசியா மற்றும் லகு உத்யோக் பாரதி தொழில் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.


இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் தங்களது கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து தொழில் முனைவோர் மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மேடையில் பேசியபோது, மக்களின் குறைகளை கேட்பது அதிகாரிகளின் கடமை. ஜி.எஸ்டி, கஸ்டம்ஸ், வருமான வரித்துறை, எம்.எஸ்.எம்.இ, இ.ஒ.பி, கனரா வங்கி அதிகாரிகள் என பல துறை அதிகாரிகள் இன்று வந்திருக்கின்றனர். கொடுக்கப்பட்ட மனு ஒவ்வொன்றுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழில் துறையில் 1500 சட்டங்களை களைந்து எடுத்து இருக்கின்றோம். 40 ஆயிரம் புகார்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.கோவைக்கு அட்டல் இன்னோவேசன் மிஷன், டிபன்ஸ் காரிடர் போன்றவை செயல்படுத்த படுகின்றது.


தொழில் வளர்ச்சிக்கு நல்ல அனுகூலமான மண்டலம் கோவை. கொடிசியா அமைப்பு அரசின் திட்டங்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிட்பி வங்கி கிளையினை கோவை குறிச்சி பகுதியில் திறந்துள்ளதை கூறிய அவர், 163 முக்கிய கிளஸ்டர்கள் இருக்கும் இடங்களில் சிட்பி குறித்து விசாரித்து இருக்கின்றனர். அடுத்த 3 வருடத்தில் 70 இடங்களில் கிளைகள் திறக்க சிட்பி முடிவு செய்துள்ளது.


தொழிலதிபர் புலம்பல்


கோவையில் மேலும் ஒரு சிட்பி கிளை வர இருக்கின்றது. கோவையில் ஏற்கனவே திறக்கப்பட்ட சிட்பி கிளையில் ஒரு வருடத்தில் 491 கோடி ரூபாய் வங்கி கடன் கொடுக்க தீர்மானம் செய்து  314 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து அனைத்து நடவடிக்கையும் மொத்ததாக சேர்த்து 620 கோடி வரை கடன் கோவை சிட்பி கிளை கொடுத்துள்ளது. மைக்ரோ தொழில்களுக்கு சிட்பி வங்கி கிளையில் கடன் கொடுக்கப்பட்டு வருகின்றது.


இந்த பட்ஜெட்டில் சிறு,குறு தொழில்களுக்கு பல சலுகைகள், திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை எல்லா இடங்களிலும் சென்று தெளிவுபடுத்தி வருகின்றோம். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எதுவுமே வரவில்லை என சொல்பவர்களுக்காக இதை சொல்கின்றேன் மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்.


தொழில் துறையினரிடம் அதிகாரிகள் மனுக்களை வாங்கி இருன்றனர். டெல்லி சென்றதும் இது குறித்து அதிகாரிகளிடம  பேசி  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜிஎஸ்டி கோரிக்கைகள் குறித்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் கட்டாயம் பேசுகின்றேன்” எனத் தெரிவித்தார்.


முன்னதாக ஹோட்டல் உரிமையாளர், மிக்சர், ஸ்வீட் மற்றும் உணவுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தொழில் அமைப்பினர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், “ஒவ்வொரு பொருட்களுக்கும் விதவிதமாக ஜிஎஸ்டி போட்டு தருவது பிரச்சனையாக உள்ளது. பன்னிற்கு ஜிஎஸ்டி கிடையாது. அதில் கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பன், கிரிம் தந்தால் நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். அனைத்திற்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டியை அதிகரித்து விடுங்கள். வானதி சீனிவாசன் வடநாட்டில் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுகிறார்கள் என்பதால் ஸ்வீட்டிற்கு 5 சதவீதமும், காரத்திற்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள் என்கிறார். தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காபி அதிகமாக போகும். இவற்றிக்கு ஒரே மாதிரி ஜிஎஸ்டி போடுங்கள். ஜிஎஸ்டி போடுவதில் கம்யூட்டரே திணறுகிறது” எனத் தெரிவித்தார்.