திருப்பூரில் காதல் பிரச்சனையில் பட்டபகலில் துரத்தி துரத்தி 3 பேரை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement


திருப்பூர் ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில். இவரும், ஹரி என்பவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் செந்தில் என்பவர் காதலித்த பெண்ணை அதே கம்பெனியில் பணிபுரியும் சக்திவேல் என்பவர் காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில் மற்றும் ஹரி இருவரும் சக்திவேலை சந்தித்து பேச அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சக்திவேல் வீட்டில் இல்லாத நிலையில், அவரது தாயார் மட்டும் இருந்துள்ளார். சக்திவேல் குறித்து கேட்டு இருவரும் சக்திவேலின் தாயாரை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. 


இதனையடுத்து சக்திவேலின் தாயார் தொலைபேசியில் சக்திவேல், அவரது தம்பி அஜித் ஆகியோரிடம் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் பனியன் துணி வெட்டும் லே கட்டிங் கத்தியை கொண்டு செந்தில், ஹரி இருவரையும் தாக்கியுள்ளனர். அந்த வழியாகச் சென்ற ராஜ்குமார் என்பவரும் இதனை கண்டு தடுக்க முயன்றுள்ளார். அப்போது செந்தில், ஹரி ஆகிய இருவரும் தப்பி ஓடிய நிலையில், ராஜ்குமார் அவர்களிடத்தில் சிக்கி உள்ளார். அவரை துரத்தித்துரத்தி சகோதரர்கள் இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் இவர்களின் தாயாரும் சேர்ந்து மிளகாய்ப்பொடி தூவி தாக்கியுள்ளார்.


முதுகு, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராஜ்குமாருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ராஜ்குமார் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்து ஓடி வந்து அருகில் இருந்த பைக் கன்சல்டிங் கடையில் தஞ்சம் புகுந்தார். 




விடாமல் துரத்திய சகோதரர்கள் கடைக்குள் புகுந்து ராஜ்குமாரை தாக்க முயன்றனர். ஆனால் கடை உரிமையாளர்கள் அவர்களை தடுத்து உடனடியாக கடை கதவுகளை மூடியதால் ராஜ்குமார் உயிர் தப்பினார். எனினும் விடாமல் கத்தியுடன் சகோதரர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை பேசி அனுப்பி வைத்துவிட்டு காயம்பட்ட இளைஞரை இரு சக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கடை உரிமையாளர்கள் அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியுடன் பட்டப்பகலில் துரத்தித் துரத்தி இளைஞர்களை தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண