முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாகவும், ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் கோவையில் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது மாட்டுக்கறி பிரியாணி விருந்திற்கு தடை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் பன்றி கறி விருந்து நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.




இந்த எதிர்ப்பையும் மீறி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் கரப்பான்பூச்சி என்ற அமைப்பு சார்பில் இந்த மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். இந்த பீப் பிரியாணி விருந்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், அவர்களுக்கு பீப் பிரியாணி, பீப் கிரேவி மற்றும் கைமா வடை ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விருந்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பீஃப் பிரியாணியை ருசித்து மகிழ்ந்தனர். 




இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், ”பேரறிவாளன் விடுதலை கொண்டாடும் வகையிலும், ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி வழங்க வேண்டும் கோரியதை அடுத்து அத்திருவிழா இரத்து செய்யப்பட்டதை கண்டித்தும் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடைபெறுகிறது. உணவில் கூட மத வேற்றுமையை கற்பிக்கும் சங் பரிவார கூட்டத்தை கண்டித்து இந்த மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடத்தப்படுகிறது. மாட்டுக்கறி ஏழை, எளிய மக்களின் சத்தான உணவு. எளிமையாக கிடைக்கும் இறைச்சி மாட்டு இறைச்சிதான்.


இந்த மாட்டுக்கறி பிரியாணி விருந்திற்கு சங் பரிவார கூட்டத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதைப்பற்றி கவலையில்லை. அவர்கள் சொன்னதைப் போல பன்றி கறியும் சாப்பிடுவோம். மனிதர்களுக்கு ஏற்புடைய எந்த உணவையும் சாப்பிடுவோம். 1972ம் ஆண்டு கோவையில் பெரியார் தலைமையில் பன்றிக்கறி விருந்து நடத்தினோம். உணவில் சாதி மத பேதம் கிடையாது. உணவை மதத்திற்குள் கொண்டு வரக்கூடாது” என அவர் தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண