கோவை மாவட்டம் அன்னூரில் டாஸ்மாக் கடையை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை திருடிய நபர்கள், போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக அங்கிருந்த சிசிடிவி கேமரா ஹார்டிஸ்க்கையும் திருடிச் சென்றனர்.
கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், மது பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பல இடங்களில் அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்கி குடிக்கவும் தயாராக உள்ளனர். குடிப்பதற்காகவும், அதிக விலைக்கு விற்று இலாபம் பார்ப்பதற்காகவும், டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபானங்கள் திருடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கொள்ளை நடந்துள்ளது.
கோவை மாவட்டம் குமாரபாளையம் அடுத்த காக்காபாளையம் பகுதியில் 1542 என்ற அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த கடையும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் மதுபான கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் அன்னூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு பதிவான கை ரேகைகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையில் இருந்த மது பானங்களை சோதனை செய்தனர். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் நுழைந்த அடையாள தெரியாத நபர்கள், 2 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் காவல் துறையினரிடம் பிடிபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் திருடிச் சென்றது தெரியவந்தது. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் இங்கு முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததும், காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ளாமல் இருந்ததும், இந்த திருட்டு சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.